“கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது” என்ற எண்ணக் கருவின் பிரகாரம் , அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்க ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நிதியம்,வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பன இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
வெளிநாட்டில் பணிபுரியும் மற்றும் வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்த கலந்துரையாடல் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரின் தலைமையில் 03.09.2025 புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
வெளிநாடுகளில் உயிரிழக்கும், அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கும், சிறையில் அடைக்கப்படும் அல்லது காணாமல் போகும் இலங்கை தொழிலாளர்களுடைய இங்கிருக்கும் பிள்ளைகளின் பாடசாலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்வியை இந்தத் திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லவிருக்கும் இளைஞர்,யுவதிகளுக்கு வெளிநாட்டு மொழிகளை கற்பதற்கு நிதி உதவி வழங்குதல் , மொழிப் பயிற்சிப் பாடாசலைகளில் வளவாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்குதல், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன் அபிவிருத்திப் பயிற்சிக்காக கிராமிய இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்குதல் மற்றும் கிராமப்புறங்களை இலக்காகக் கொண்டு சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய திறமையான தொழிலாளர் படையை உருவாக்குதல் ஆகியவற்றையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவின் மேலதிகச் செயலாளர் கலாநிதி எம்.எம்.எஸ்.எஸ்.பி. யாலேகம, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைவர் கோகல விக்ரமசிங்க, இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் தீர ஹெட்டியாராச்சி மற்றும் ஜனாதிபதி நிதியம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள் சிலரும் இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.