இஸ்மதுல் றஹுமான்
ஆன்மீகப் பணிகளுக்காக சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வரும் பக்தர்களுக்கு வீஸா பெற்றுக்கொள்ள நீண்ட செயல்முறைகளால் ஏற்படும் தாமதத்தை குறைக்க பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வொன்றை பெற்றுத்தருவதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் சிவில் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அரச பிரதிநிதிகளுக்கு இடையிலான மூன்றாவது பேச்சுவார்த்தை அண்மையில் அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் இடம்பெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினர்களான முகம்மது அஸ்லம்,பஸ்மின் சரீப், அர்க்கம் இல்யாஸ் ஆகியோர்கள் அரச பிரதிநிதிகளாகவும், அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா உட்பட 15 முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இப்பேச்சுவார்தையில் கலந்து கொண்டனர்.
இங்கு மேலும் மதம் சார்ந்த நூல்களை இறக்குமதி செய்வதில் முகம் கொடுக்கும் சிக்கல்கள், தாதி மாணவர்களின் மற்றும் வைத்தியசாலைகளில் கடமை புரியும் தாதிகளின் கட்டாய சீருடை தொடர்பாக முஸ்லிம் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள இடையூறு, வீடுகளில் சம்பவிக்கும் மரணங்களின் இறுதிச்சடங்குகளை செய்வதில் ஏற்படும் தாமதத்திற்கான காரணம் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இம்முறை தேசிய மீலாத் விழாவை ஜனாதிபதியின் தலைமையில் ஹம்பந்தொட்ட, போலான மஸ்ஜிதுல் அரூஸியா ஜும்ஆ பள்ளிவாசலில் நடாத்துவதற்கு திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.