களனி பல்கலைக்கழக இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் (AIS) தனது முக்கிய நிகழ்வாகிய, கலம்-வ-நூர், சஞ்சிகை வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா 2025 ஐ, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி, விஞ்ஞான பீடத்தின் A8 மண்டபத்தில் சிறப்பாக நடாத்தி முடித்தது
இவ்விழா, மஜ்லிஸ் தலைவர் சராபத் அஹமத் தலைமையில் இடம்பெற்றது. மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வெளியிடப்பட்ட ஒன்றியத்தின் வருடாந்த மும்மொழி சஞ்சிகையின் நான்காவது தொகுதியான உஸ்வா 2024-25 இவ்விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 2024-25 காலப்பகுதியில் AIS உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகளை நினைவுகூரும் விதமாகவும் இந்நிகழ்வு அமைந்தது.
இந்தத் தவணையின் இறுதி நிகழ்வாக மட்டுமின்றி, முதல் முறையாக தனித்துவமான நிகழ்வாக சஞ்சிகை வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா நடாத்தப்பட்டது.இது AIS வரலாற்றில் புதிய மைல்க் கல்லொன்றாக பதிந்தது.
இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக, களனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் ஸ்தாபக செயலாளரும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான மூத்த பத்திரிகையாளர் அல்ஹாஜ் என்.எம். ஆமீன் அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக, Wheels Lanka குழுமமும் INSIGHT மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனத் தலைவருமான அல்ஹாஜ் டி.எல்.எம். நவாஷ், இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் வெளியுறவுத் துறை துணை அமைச்சரும் முன்னாள் AIS தலைவருமான அஃமத் சாதிக், மற்றும் பல்கலைக்கழகத்தின் சிறந்த பட்டம் பெற்ற பட்டதாரியும் முன்னாள் AIS தலைவருமான முகமது ஆகில் ஆகியோர் பங்கேற்றனர்.
AIS இன் மூத்த பொருளாளர், பேராசிரியர் எம்.ஜே.எம். ராஸி மற்றும் USWA 2021 இன் தலைமை ஆசிரியர் நபீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அறிவு, படைப்பாற்றல், மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்திய இவ்விழா, AIS இன் உணர்வையும், அர்த்தமுள்ள பங்குபற்றுதலின் மூலம் இளைஞர்களை மேம்படுத்துவதற்கான அதன் நீடித்த அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.