இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பில் இருந்து மடு தேவஸ்தானத்திற்கான விசேட புகையிரத சேவைக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக பிரதி அமைச்சர் சுதத் திலகரத்ன நீர்கொழும்பு மாநகர முதல்வரின் காரியாலயத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் திலகரத்ன அங்கு மேலும் கூறுகையில் நீர்கொழும்பு பிராந்திய கத்தோலிக்க சபையினால் 15 தொகுதிகளை கொண்ட விசேட புகையிர சேவையை வழங்குமாறு கேட்டிருந்ததில் ஏற்பட்ட தொடர்பாடல் குறைப்பாட்டினால் தான் 26 இலட்சம் ரூபா செலுத்துமாறு கேட்கப்பட்டது.
அதனை சீர்செய்து கத்தோலிக்க பக்தர்கள் மடு தேவஸ்தானத்தை நோக்கிப் பயணிப்பதற்கான விசேட புகையிரதம் இன்று 13ம் திகதி இரவு 9.00 மணிக்கு நீர்கொழும்பு புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும். அவ் விசேட புகையிரதம் குரண, கட்டுநாயக்க, சீதுவ, ஜாஎல, கந்தான, றாகம, கம்பஹா, வேயங்கொட, மீரிகம ஆகிய புகையிரத நிலயங்களிலும் நிறுத்தப்படும். இப் பிரதேசங்களைச் சேர்நத
கத்தோலிக்க பக்தர்கள் குறித்த கட்டணத்தை செலுத்தி டிக்கட்டை பெற்று பயணிக்க முடியும்.
இப் புகையிரத சேவை மீண்டும் 15ம் திகதி மாலை 4.30 மணிக்கு மடு தேவஸ்தானத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நீர்கொழும்பு வந்தடையும்.
இது தொடர்பான அறிவுறுத்தல் நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவஸ்தானங்கள் ஊடாக மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் மொரட்டுவ புகையிரத நிலையத்தில் இருந்தும் மடு தேவஸ்தானத்தை நோக்கி விசேட புகையிரத சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய முக்கியத்துவம் கருதி கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் இந்ந விசேட புகையிரத சேவையை வழங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவ் ஊடக சந்திப்பில் நீர்கொழும்பு முதல்வர் சட்டதரணி ரொபட் ஹீன்கெந்த,பிரதி மேயர் சாமர பிரனாந்து ஆகியோரும் கலந்து கொண்டனர்.