யானைகள், ரயில்களுடன் மோதும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதன் காரணமாக, பிரதான ரயில் மார்க்கங்களில் யானைகள் பெரும்பாலும் உலாவும் பகுதிகளுக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கெமரா அமைப்பை ரயில்வே திணைக்களம் 10.08.2025 ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தது.
இந்த கெமரா அமைப்பு அபன்பொல காசிகோட்டே யானைகள் செல்லும் ரயில் சுரங்கப்பாதைக்கு அருகிலும், கல்ஓயா மற்றும் மின்னேரிய பிரதேசங்களில் யானைகள் அடிக்கடி உலாவும் இடங்களுக்கு அருகிலும் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு பொருத்தப்பட்டது.
24 மணி நேரமும் இயங்கும் இந்த கெமரா அமைப்பு, ‘சோலார் பேனல்கள்’ மூலம் மின்சாரத்தைப் பெறுகிறது.
கெமராவில் பதிவு செய்யப்படும் காட்சிகளின் அடிப்படையில், அனுராதபுரம் பிரதான ரயில் கட்டுபாட்டு மையத்திற்கு ஜிபிஎஸ் மூலம் சிக்னலை அனுப்பும் தொழில்நுட்பத்தை நிறுவ ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த நேரத்தில் ரயில் மார்க்கத்தில் இயங்கும் ரயில்களின் சாரதிகளுக்கு காட்சிகளின் அடிப்படையில் தகவல் தெரிவிக்கப்படும்.
ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர உள்ளிட்ட அந்த திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதுபோன்ற ஒரு கெமராவை நிறுவ ரயில்வே திணைக்களத்திற்கு சுமார் 20,000 ரூபாய் செலவாகும் என்று அவர்கள் கூறினர்.
எனவே வள நன்கொடையாளர்கள் இருந்தால், அவர்கள் இந்த கெமரா அமைப்புகளை வழங்க முடியும் என்றும், அப்படியானால், ரயில் மாரக்கத்தில் யானைகள் இருக்கும் பகுதிகளில் கூடுதல் கெமராக்களை நிறுவ முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.