நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் மீண்டும்அத்துமீறி செல்லும் கனரக வாகனங்களால் பொது மக்கள் அச்சமடைகின்றனர்.
குறித்த வீதியில் கனரக வாகனங்கள் சென்று வருவதற்கு முழுமையாக தடை விதித்து அதற்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகை நகரின் எல்லை நுழைவு பகுதியில் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது இதனையும் மீறி தற்போது தொடர்ந்து கனரக வாகனங்கள் அத்துமீறி செல்லும் நிலை இருக்கிறது இதற்கு பொறுப்புவாய்ந்த நானுஓயா பொலிஸார் அதனை ஒரு பிரச்சினையாக கருத தயாரில்லாத நிலையில், பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியானது 3.2 கிலோமீட்டர் தூரம் கொண்டதும் ,பாரிய வளைவுகளையும் , பள்ளத்தையும் கொண்டது இதில் தற்போது தாராளமான கனரக வாகனங்கள் சென்று வருவதற்கு பொறுப்புவாய்தவர்களின் கவனயீனமும், பொறுப்பற்றதன்மையும் நேரடியாக மக்களை பாதிக்கிறது.
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இறுதியில் பேருந்து ஒன்று வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் குறித்த வீதியூடாக கனரக வாகனங்கள் செல்வதை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் தடை செய்யப்பட்டது இருந்தும் தற்போது தொடர்ந்து இருபுறங்களிலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் கனரக வாகனங்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் அத்துமீறி செல்லும் நிலை தொடர்ந்து இருக்கிறது.
கனரக வாகனங்கள் சென்று வருவதற்கு முழுமையாக தடை விதித்து அதற்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள போதிலும் நடவடிக்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? என்பதை கண்காணிக்கும் பொறிமுறையை உருவாக்கவேண்டும். இல்லாவிட்டால் அதுவும் பழங்கதை தொடர்கிறது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் .
மேலும் இவ்வீதியில் அதிகமாக வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றது இதனால் சிறிய வாகன சாரதிகள் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீதி ஓரங்களில் தொழில் புரிவோர் மற்றும் பாடசாலை மாணவர்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே வீதி அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸார் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இணைந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் இங்கு செல்லாமல் தடுப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த விடயத்தின் தாற்பரியத்தை உணரவேண்டும் என்பது பிரதேச வாசிகளின் அவா.