கம்பனிகள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன 04.08.2025 திங்கட்கிழமை தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
கம்பனிகள் (திருத்தச்) சட்டமூலம் கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
அதற்கமைய இந்த சட்டத்திருத்தம் மூலம் தனிப் பங்குதாரர் ஒருவருடன் கம்பனியொன்றை கூட்டிணைத்தல், கம்பனியொன்றின் பெயர் மாற்றத்தின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக காலா எல்லையை 20 நாட்களாக நீடித்தல், காவுநருக்கு அல்லது காவுநர் பங்குக்கு பங்கு ஆணைப்பத்திரம் வழங்குவதை தடை செய்தல், காவுநருக்கான அல்லது காவுநர் பங்கிற்கான பங்கு ஆணைப்பத்திரத்தை வழங்குவது தொடர்பில் கம்பனிக்கு அறிவித்தல் மற்றும் ஆணைப்பத்திரத்தை வைத்திருப்பவரின் தகவலை கம்பனி செயலாளருக்கு அறுபது நாட்களுள் வெளியிடுவதற்கு ஆணைப்பத்திரத்தை வைத்திருப்பவர் மீதான கடமையை விதித்தல், பிரதிபயனைப் பெற்றதன் மேல் கம்பனியொன்று அத்தகைய பிரதிபயனைப் பெற்ற தினத்திலிருந்து 20 நாட்களில் பங்குகளின் பிறித்தொதுக்குகை ஒன்றை செய்தல் என்பன இந்த சட்டமூலத்தை ஏற்பாடுகளில் உள்ளடக்கப்படுகின்றன.
மேலும், பங்குகளின் ‘பயனுகர் சொத்தாண்மை’ தொடர்பில் புதிய ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தல், அதாவது ‘பயனுகர் சொந்தக்காரர்’ பற்றிய தகவல்களை செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களினால் பதிவாளர்களுக்கு வெளிப்படுத்துதல், பதிவாளரினால் அத்தகைய தகவல்களைப் பேணுதல், கம்பனியின் பயனுகர் சொத்தாண்மை பற்றிய தகவல்களை பதிவாளரினால் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துதல், கம்பனி அல்லது பதிவாளரினால் பயனுகர் சொந்தக்காரர் தொடர்பான விபரங்களை அரச அதிகாரிகளுக்கு வழங்குதல் மற்றும் ‘பயனுகர் சொந்தக்காரர்’ மற்றும் ‘பயனுள்ள கட்டுப்பாடு’ என்பன மீது புதிய பொருள்கோடல் உள்வாங்குதல் இந்த சட்டத்திருத்தம் மூலம் இடம்பெறுகின்றது.
அத்துடன், சில ஆவணங்கள் மற்றும் தகவல்களை முன்வைக்கும் போது கம்பனிக்கு வழங்கும் கால எல்லையை நீடிப்பதற்கு பதிவாளருக்கு அதிகாரத்தை வழங்குதல், பெயர் நீக்கப்பட்டுள்ள கம்பனிக்கு குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள் மீண்டும் பதிவு செய்வதற்கும் அரசுடைமையாக்கப்பட்ட அதன் சொத்துக்களை மீளப்பெறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குதல், பிணக்கை மத்தியஸ்தம் செய்வதற்கு கம்பனிகள் பிணக்குகள் சபை முன்னிலையில் சமர்பித்தலை விரிவாக்குதல், கம்பனிகள் பணிப்பாளர்களை அகற்றும் நடவடிக்கைமுறைகளை திருத்துதல், கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் சில அதிகாரிகள் வகையினரும் நிதி விடயப்பொறுப்பு அமைச்சரை வினவி ஊக்குவிப்பு தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தல், பொதுவான தண்டனைகளுக்கு ஏற்பாடுகள் செய்தல் மற்றும் முதன்மைச் சட்டவாக்கத்தின் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில உரைகளிலுள்ள பிழைகளை நிவர்த்தி செய்வதற்கான அட்டவணையொன்றுக்காக ஏற்பாடுகளை செய்தல் இந்த சட்டத்திருத்தம் மூலம் இடம்பெறுகின்றது.
கம்பனிகள் (திருத்த) சட்டமூலத்தை முதலாவது மதிப்பீட்டுக்காக 2025 ஜூன் 05 ஆம் திகதி வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்டது.
அதற்கமைய, இந்த கம்பனிகள் (திருத்த) சட்டமூலம் 2025 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க கம்பனிகள் (திருத்த) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.