வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின் முதலாவது ரந்தோலி பெரஹெர 04.08.2025 திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்று வழிகள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்று வழிகள் பின்வருமாறு,
- கட்டுகஸ்தொடையிலிருந்து கண்டி நகரத்திற்கு வரும் அனைத்து கனரக வாகனங்களும் மஹய்யாவ சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக பொலிஸ் சந்தி வழியாக கண்டி நகரத்திற்கு பயணிக்க முடியும்.
- கட்டுகஸ்தோட்டையிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் டி.எஸ். சேனநாயக்க வீதி வழியாக நுழைந்து, கந்தே வீதியூடாகச் சென்று, மீரா மக்காம் பள்ளிவாசல் அருகே பயணித்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாகச் செல்லலாம்.
- கட்டுகஸ்தோட்டை நோக்கிச் செல்லும் வாகனங்கள் தலதா வீதி, யட்டிநுவர வீதி, கந்தே வீதி, டி.எஸ். சேனநாயக்க வீதி வழியாகப் பயணிக்க முடியும்.
- தென்னேகும்புர மற்றும் அம்பிட்டிய திசைகளிலிருந்து வரும் வாகனங்கள் சங்கராஜ மாவத்தை வழியாக வேல்ஸ் பார்க் சந்திக்குச் சென்று எஹெலேபொல குமாரிஹாமி மாவத்தையில் வலதுபுறம் திரும்பலாம். ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள போகம்பரை நோக்கிச் செல்லும் வாகனங்களும், கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்களும் இடதுபுறமாகவும், கண்டி நகரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் வலதுபுறமாக ரஜ பிஹில்ல மாவத்தை சந்தியில் பள்ளிவாசல் ஊடாக செல்லலாம்.
- நகரத்திலிருந்து அம்பிட்டிய, தெல்தெனிய வீதியில் பயணிக்கும் வாகனங்களானது கடிகார கோபுர சுற்றுவட்டத்திலிருந்து தலதா வீதி வழியாகச் சென்று, குயின் ஹோட்டலின் பக்கவாட்டு நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஜோய் படகு சேவையைக் கடந்து, சங்கராஜ மாவத்தை வழியாகச் செல்லலாம். மேலும், போகம்பர சுற்றுவட்டத்தில் எஹெலேபொல குமாரிஹாமி மாவத்தை, ரஜபிஹில்ல மாவத்தை, வேல்ஸ் பார்க் சந்தி ஊடாக சங்கராஜ மாவத்தை வழியாக அம்பிட்டிய மற்றும் தென்னேகும்புர நோக்கிச் செல்லலாம்.
- கொழும்பிலிருந்து கண்டி நகருக்குள் நுழையும் மற்றும் கண்டியிருந்து கொழும்பு நோக்கி வெளியேறும் வாகனங்கள் பழைய பேராதனை வீதி மற்றும் வில்லியம் கோபல்லவ மாவத்தை வழியாக பயணிக்க முடியும்.
கண்டி எசல பெரஹெர கடந்த 30ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி வரை வீதி ஊர்வலம் இடம்பெறும்.
இதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு திட்டம் மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். வீதித் தடைகள், பாதுகாப்பு கடமைகள், வாகனங்கள் மற்றும் மக்களைச் சரிபார்த்தல், சுற்றுலாப் பயணிகளை வழிநடத்துதல் மற்றும் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட விசேட திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.