இந்த ஆண்டு 57 திட்டங்களுக்கு இலங்கை முதலீட்டு சபை ஒப்புதல் அளித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்தார்.
தனது பேஸ்புக் கணக்கில் பதிவு ஒன்றை இட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டங்களின் மொத்த மதிப்பு 569 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், இதில் 507 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏற்கனவே நாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 101 சதவீதம் அதிகரிப்பு என்று சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.
இதற்கிடையில், ஜூன் மாதத்தில் பணவீக்கம் சற்று குறைந்துள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் 0.6 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில் 0.3 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிடுகிறது.
மே மாதத்தில் 5.9 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கமும் ஜூன் மாதத்தில் 4.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க வரிகள் தொடர்பாக அரசாங்கம் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இவ்வாறு கூறினார்.