இஸ்மதுல் றஹுமான்
கட்டான, கடியல பிரதேசத்தில் நடாத்திச் சென்ற துப்பாக்கி உற்பத்தி தொழிற்சாலையை சுற்றிவலைத்த நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் விசாரணை பிரிவினர் இரு சந்தேக நபர்களை கைது செய்ததுடன் மூன்று உள்நாடடு தாயாரிப்பு துப்பாக்கிகள் வெளிநாட்டு தாயாரிப்பான கை துப்பாக்கி மற்றும் கை துப்பாக்கி பாகங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் விசாரணை பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் தஸாநாயக்கவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக தர்மசேனவின் ஆலோசனையில் குற்றவியல் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன ரணசிங்கவின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த சுற்றிவலைப்பைச் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வீடுகளை பரிசோதித்த போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த துப்பாக்கிகளில் வெளிநாட்டு தயாரிப்பான கை துப்பாக்கி ஒன்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரி 56 துப்பாக்கி சன்னங்களை பயன்படுத்தக்கூடிய கல்கடஸ் வகை துப்பாக்கி ஒன்று கட்டுத் துப்பாக்கி மற்றும் கைதுப்பாக்கியின் பாகங்கள் என்பன கைபற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபர்களிடமிருந்து வாள் ஒன்று, துப்பாக்கி உற்பத்திக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கும் கிரைண்டர், டிரில் மெஷின் உற்பட உபகரணங்களும் கைபற்றப்பட்டுள்ளன.
கடியல, தெமன்ஹந்தியைச் சேர்ந்த ஆறியமுனி சூலரத்ன சில்வா (51வயது),அசோக்க சந்திரலால் சொய்ஸா (58வயது) ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். இரு சந்தேக நபர்களும் மைத்துனர்கள் ஆவர்.
இவர்கள் துப்பாக்கிகளை உற்பத்தி செய்து யாருக்காவது விற்பனை செய்திருந்தால் அவற்றையும் கைபற்றுவதற்காக சந்தேக நபர்களை தடுப்புக்காவல் உத்தரவு பெற்று தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.