சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்திச் சென்று காணாமலாக்கியது தொடர்பான வழக்கில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகர சாட்சியாளராகப் பெயரிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய குழாமிற்கு தெரிவித்துள்ளாா்.
நீதிபதிகளான நாமல் பலல்லே, மகேஷ் வீரமன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகிய மூவர் கொண்ட மேல் நீதிமன்ற குழாம் முன்னிலையில் தொடர்புடைய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, இந்த வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய தலைமை புலனாய்வு அதிகாரியும் விசாரணையை மேற்பார்வையிட்டவருமான ஷானி அபேசேகரவின் பெயர் சாட்சியாளர் பெயரிடப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளாா்.
2022 நவம்பர் 29 ஆம் திகதி அவரை சாட்சியாளராக பெயரிடுமாறு நீதிமன்றத்தில் தான் கோரிக்கை விடுத்ததாகவும், வழக்குத் தொடுப்பவர் சார்பில் ஆஜரான அப்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அது பரிசீலிக்கப்படும் என்று தனக்குத் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளாா்.
இருப்பினும், இந்த வழக்கில் ஷானி அபேசேகர இன்றுவரை சாட்சியாளராகப் பெயரிடப்படவில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி மேலும் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளாா்.
அப்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்றுகொண்டு நீதிமன்றத்துக்கு விளக்கமளித்த அரச தரப்பபில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, இந்த வழக்கில் ஷானி அபேசேகர ஏற்கனவே 109 ஆவது சாட்சியாளராக தற்போது வரையில் பெயரிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளாா்.