இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) ஏற்பாடு செய்துள்ள 27வது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் விழா, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில், இந்த வருடம் (2025) டிசம்பர் மாதத்தில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த முறையும், ஏற்றுமதி நிறுவனங்கள், ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளுக்கான விண்ணப்பங்களை ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்றுமதி நிறுவனங்கள் https://pea.edb.gov.lk என்ற வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் என்பது ஏற்றுமதித் துறைக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதியால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். இந்த விருது இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த சேவையைச் செய்த ஏற்றுமதியாளர்களை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை 1981 இல் ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் திட்டத்தைத் ஆரம்பித்தது. இதுவரையிலும் 26 விருது வழங்கும் விழாக்களை ஏற்பாடு செய்துள்ளது.