கொரிய குடியரசின் E-8 வீசா வகையின் (பருவகாலத் தொழிலாளர்கள்) கீழ் இலங்கைத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்கு வசதியளிக்கும் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2025.02.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கொரிய குடியரசின் ஆர்வங்காட்டுகின்ற உள்ளுராட்சி நிறுவனங்களுடன் இராஜதந்திர வழிமுறை மூலம் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டுள்ளன.
கொரிய குடியரசின் யொங்க்வோல் உள்ளுராட்சி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பயனாக இருதரப்பினருக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இலங்கையர்களுக்கு பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழ் குறுகிய காலம் (05 மாதம் தொடக்கம் 08 மாதங்கள் வரை) யொங்க்வோல் பிராந்தியத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடிக் கிராமங்களில் தொழில் புரிந்து வருமானம் ஈட்டிக் கொள்வதற்கும் மற்றும் எமது நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டிக்கொள்வதற்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது.
உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதன்படி, தேவையான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பிறகு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகுதிவாய்ந்த தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்து விரைவில் தென் கொரியாவுக்கு அனுப்பும் என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்த நோக்கத்திற்காக வேறு எந்த வெளி தரப்பினருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டுக்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு கோசல விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.