இஸ்மதுல் றஹுமான்
சட்ட விரோதமான கடல் மார்க்கமாக எடுத்து வந்த 01 கோடி 85 இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகளுடன் ஒருவரை நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர். அவற்றை ஏற்றிவந்த லொரியும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
மூன்று படகுகளில் பீடி இலைகளை சட்ட விரோதமான நாட்டுக்குள் கொண்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக செயல் பட்ட பொலிஸார் நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக்க தர்மதாஸவின் கண்காணிப்பில் பிராந்திய குற்றவியல் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன ரணசிங்கவின் வழிநடத்தலில் பொலிஸ் பரிசோதகர் விகரமசிங்கவின் தலைமையில் பொலிஸ் சார்ஜன்களான வசன்த (41466), செனவிரத்ன (60490) பொலிஸ் கான்ஸ்டபல்களான உதயகுமார (82685), கனிஷ்க(89056), தென்னகோன் (99759), மன்சூர் (101418), ரோஹன (104179), ஜனக்க(14969) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் வீதித் தடையை அமைத்து நீர்கொழும்பு குரண பிரதேசத்தில் வைத்து எஸ்பி எல் எல் 3627 இலக்க லொரியை நிறுத்தி பரிசோதித்துள்ளனர்.
அதில் 1881 கிலோ கிராம் 81 கிராம் பீடி இலைகள் இருந்துள்ளன. அதன் சந்தைப் பெறுமானம் 01 கோடி 84 இலட்சத்து 33 ஆயிரத்து 800 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு, பிடபன தெற்கைச் சேர்ந்த பர்மபரகே திசாங்க அல்விஸ் பிரனாந்து என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைபற்றப்பட்ட பீடி இலைகளையும் லொரியையும் சட்ட நடவடிக்கைக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.