மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினை குறைத்தல் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் 18.06.2025 புதன்கிழமை இடம் பெற்றது.
மாவட்டத்தை அனர்த்த பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கு UN Habitat நிறுவனத்தினால் 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி அனுசரனையின் கீழ் எதிர்வரும் காலங்களில் மாவட்டத்தில் பல வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
காலநிலை மாற்றத்தினால் அதிகளவு வெள்ள அனர்த்த பாதிப்பை எதிர்கொள்ளும் மாவட்டமாக எமது மாவட்டம் காணப்படுகின்றது. இதனை முன்னிட்டு வெள்ள பாதிப்பை குறைப்பதற்கான உயர் அதிகாரிகள், துறைசார் நிபுணர்களின் கருத்துக்களை அரசாங்க அதிபரிடம் தெரிவித்தனர்.
முந்தனையாறு மற்றும் மாதுரு ஓயாவில் இருந்து சடுதியான வெள்ள நீர் வரத்து காரணமாக மாவட்டத்தில் அதிகளவான தாழ்நில பிரதேசங்களில் அழிவுகள் மற்றும் பெறுமதியான சொத்துக்கள் பாதிக்கப்பட்டமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் காலநிலை மாற்றத்தின் பாதிப்பை குறைப்பதற்கு முன்னாயத்த பொறிமுறை ஒன்றை அமைத்தல் தொடர்பாக கிழக்கு பல்கலைக்கழகம் மற்று மொரட்டுவை பல்கலைக்கழகங்களில் தொழில் நுட்ப அறிவை பெற்று மாவட்டத்தில் செயற்படுத்துவது தொடர்பாகவும் இதன் போது ஆராயப்பட்டது.
களப்புகளில் அதிகளவான வண்டல் மண் தேங்கியுள்ளமையினால் வெள்ள நீர் ஒட்டம் தடைப்படுவதாக இதன் போது நிபுணர்களினால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் ஆற்றுவாயினை முகாமைத்துவம் செய்வதனால் நீர் இருப்பை உறுதிப்படுத்துவதுடன் சூழல் நேயமிகு உயிர் பல் வகைமையையும் பாதுகாக்க முடியும் என கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
மாவட்டத்தில் இயற்கையாகவே வெள்ள நீர் வடிந்தோடும் தோனாக்கள் முடப்பட்டு காணப்படுவது மட்டுமல்லாது சட்டவிரோத நில அபகரிப்பு காரணமாக வெள்ள நீர் கடலில் செல்வது தடைப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இக் கலந்துரையாடலின் போது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர், காத்தான்குடி நகர சபை தவிசாளர், பிரதேச செயலாளர்கள், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர், பொறியாளர்கள், கிழக்கு பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், திணைக்கள தலைவர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், , மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன அங்கத்தவர்கள், விவசாய அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.
கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் 35,000 அதிகமான குடும்பத்தினர் இடம் பெயர்ந்ததுடன் அண்ணளவாக 55 000 ஹெக்டயருக்கு அதிகமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு சுமார் 3.3 பில்லியன் பெறுமதியான இழப்பு ஏற்பட்டதாக தரவுகள் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.