நாட்டில் 16 மாவட்டங்களில் ஜூன் 30 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதிவரை டெங்கு கட்டுப்பாட்டு வாரம் செயற்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பொது மருத்துவ ஆலோசகர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு நேற்று (19) கருத்து தெரிவித்த பிரஷீலா சமரவீர மேலும் தெரிவிக்கையில்,
இந்த ஆண்டு இதுவரை இலங்கையில் டெங்கு நோயால் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 26 ஆயிரத்து 775 டெங்கு நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணம், சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து டெங்கு நோயாளிகள் அதிகளவில் பதிவாகியுள்ளனர். டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
16 மாவட்டங்களில் உள்ள 111 சுகாதாரப் பிரிவுகளில் மீண்டும் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் செயற்படுத்தப்படுகிறது. அதிக ஆபத்துள்ள பகுதிகளில் டெங்கு நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டறிந்து அகற்ற எங்கள் குழுக்கள் வரும். நீங்கள் கவனக்குறைவாக நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களைப் பராமரித்தால், நாங்கள் சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்