இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆயுதங்கள் மற்றும் இராணுவத்துக்கு தேவையான பொருட்களுடன் சரக்கு விமானம் ஒன்றை பாகிஸ்தானுக்கு சீனா அனுப்பியதாக இணைய தளங்களில் நேற்று (13) தகவல்கள் பரவின.
தற்போதைய சூழ்நிலையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.இந்த தகவலை சீனா உடனடியாக மறுத்துள்ளது. இது தொடர்பாக சீன மக்கள் விடுதலை இராணுவ விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தானுக்கு ஒய்-20 என்ற சரக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் அனுப்பப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் முற்றிலும் தவறானது. அது வதந்தியாகும். அதை யாரும் நம்ப வேண்டாம்.
இராணுவம் தொடர்பான வதந்திகளை உருவாக்கி பரப்புபவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆசியாவில் அமைதியை சீனா விரும்புகிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் சீனா ஆக்கபூர்வமாக பங்காற்றியுள்ளது.
அதே நேரம் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே நடந்த சண்டையில், இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது என்ற தகவல் சீனாவின் அதிகாரபூர்வ ஊடகங்களில் பரப்பப்பட்டன. இதை சீனாவில் உள்ள இந்திய தூதரகம் கடுமையாக கண்டித்ததுடன், இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதற்கு முன் அதனை சரிபார்க்க வேண்டும் என்று சீனாவின் டேப்ளாய்டு குளோபல் டைம்ஸை எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது.