இஸ்மதுல் றஹுமான்
பிரபல டியூஷன் ஆசிரியையின் கல்வி நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞனை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியது தொடர்பாக ஆசிரியையின் கணவரும், முகாமையாளரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். ஆசிரியையான "டீச்சர் அம்மா" தலைமறைவு.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது பிரபல கோடிஸ்வர ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரிட்ச்சைக்காக பிரத்தியேக வகுப்புகளை நடாத்தும் "டீச்சர் அம்மா" என அழைக்கப்படும் ஆசிரியையான ஹயேஷிக்கா பிரனாந்துவின் கட்டான, தெமந்ஹந்தியில் அமைந்துள்ள குயின்ஸ் கல்வி நிறுவனத்தில் கிம்புலபிட்டிய, கல்மன்கடயைச் சேர்ந்த 21 வயது கிஷான் அகலவத்த பணியாற்றுகிறார்.
கடந்த நவம்பர் 4 ம் திகதி முதல் கிஷால் அகலவத்த அங்கு தொலைபேசி மற்றும் ஸ்டூடியோ இயக்குனராக
கடமையாற்றி வருகிறார். வேலைப்பலு அதிகம் என்பதனாலும் இரவு நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய நிலமையினால் ஏப்ரல் 30 ம் திகதி முதல் கடமையில் இருந்து நீக்குவதாக ஏப்ரல் 21 ம் திகதி கடிதம் கொடுத்துள்ளார்.
ஹயேஷிக்கா பிரனாந்து தொடர்பாக முகநூலில் பதியப்பட்ட கருத்துக்கு கிஷாலின் அக்கா ஒருவர் “கமண்டஸ்” பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கடும் சீற்றமடைந்த டீச்சர் அம்மா கிஷான் அகலவத்தவை காரியாலயத்திற்கு அழைத்து சகல ஊழியர்கள் முன்னிலையில் ஆசிரியை ஹயேசிக்காவும் அவரது முகாமையாளரான சானக்க விஸ்வஜிதும் அவரின் முகத்தில் துப்பியும் ஆண் உறுப்புப் பகுதிக்கு கால்களால் உதைந்தும் மனிதாபிமானமற்ற முறையில் கடுமையாக தாக்கியதாகவும் அவரின் கணவர் பிரமித் சுரேந்திர வீடியோ எடுத்ததாகவும் கட்டான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடுமையான தாக்குதலுக்கு உள்ளான அவர் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் 6ம் இலக்க வார்ட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
கிஷால் வேலையில் இருந்து நீங்கினால் அவ்விடத்தில் வேலை செய்வதற்காக அங்கு வேலை செய்யும் யுவதி ஒருவரை பழக்குவதற்கு அங்கு அனுப்பியதாகவும் கிஷால் அந்த யுவதிக்கு பாலியல் சீண்டல் செய்ததாகவும் டீச்சர் அம்மா பக்கத்தாலும் கட்டான பொலிஸில் முறையிட்டுள்ளனர்.
டீச்சர் அம்மாவான ஹயேசிக்காவை பொலிஸ் நிலையம் வருமாறு அழைத்த போது அவர் சமூகமளிக்கவில்லை. அவரை தேடிச் சென்றபோது அவர் வீட்டில் இல்லை என்றும் பிரத்தியேக வகுப்பு நடாத்துவதற்காக தூரம் இடம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஹயேசிக்காவின் கணவர் பிரமித் சுரேந்திரனும் முகாமையாளர் சானக்க விஸ்வஜிதும் 9ம் திகதி வெள்ளிக்கிழமை கட்டான பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் அன்று மாலை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி பிரேமலால் அமரசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர் வரும் 14 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட பதில் நீதவான் அன்றைய தினம் ஹயேசிக்காவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டார்.