(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
எதிர்வரும் மே 6ஆம் திகதி இடம்பெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் சம்மாந்துறை பிரதேச சபை மாம்பழச் சின்னத்தின் கைவசமாகின்ற போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக அவர்கள் தனது பிரசாரத்தின் போது பயன்படுத்துகின்ற தேசிய மக்கள் சக்தியின் கைவசம் அல்லாது வேறு கட்சிகளின் அல்லது சுயேட்சை குழுக்களின் கைவசமாகின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கு எமது நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறாது என்கிற பிரசாரத்தை பொய்யாக்கும் விதத்தில் எமது சம்மாந்துறை பிரதேச சபை அபிவிருத்தி காணும் என்று ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவரும் சுயேட்சைக் குழு ஒன்று மாம்பழச் சின்னத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாபீர் பௌண்டேசன் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கலாநிதி உதுமான்கண்டு நாபீர் தனது கருத்தினை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாம் ஒருபோதும் ஆட்சியாளர்களுக்கு மாற்றமாக செயற்படுபவர்கள் அல்லர். இருந்த போதும் எம்மால் அமையப்போகின்ற உள்ளூராட்சி மன்றத்திற்கு மத்திய அரசின் ஆலோசனை வழிகாட்டல் மற்றும் அனுமதியுடன் நாங்கள் வெளிநாடுகளில் உதவிகளைக் கொண்டு அனைத்து விதமான உள்ளூராட்சி மன்றங்கள் மாத்திரமல்லாது எமது அம்பாறை மாவட்டத்திற்கான அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு மக்களால் எமக்கு வழங்கப்படுகின்ற ஆணையை நாங்கள் நிச்சயம் சரியான முறையில் பயன்படுத்துவோம்.
இதுவரை காலமும் உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸாக இருக்கட்டும் அல்லது ஏனைய கட்சிகளாக இருக்கட்டும் எவருமே அபிவிருத்தியை நோக்கிய உள்ளூராட்சி மன்றங்களையோ அல்லது மக்களின் நலன் காக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களையோ கொண்டிருக்கவில்லை. நாங்கள் இவற்றை சரி செய்து உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக மக்களுக்கு கிடைக்கின்ற நலன்களை வெளிநாடுகளில் இருந்து பெறப்படுகிற நிதிகள் ஊடாகவும் ஏனைய உட்கட்டுமானங்கள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாகவும் பாரிய திட்டத்தினைக் கொண்டு வந்து மக்களின் எதிர்கால வெளிச்சமான வாழ்க்கைக்கும் தொழில் அற்றவர்களுக்கு தொழில்களையும் வழங்கி சுய தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகளை அமைப்பதன் ஊடாக அந்த தொழிற்சாலைகளில் திறமை மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் ஊடாக இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி, அவர்களுடைய சுபீட்சமான வாழ்க்கை வழி வகுப்பதற்கு பல திட்டங்களை முன் வைத்துள்ளோம். இதேபோன்று எமது உள்ளூராட்சி மன்றங்களுக்கு கீழ் அமைந்திருக்கின்ற வளங்களைப் பயன்படுத்தி, சுய தொழில் வாய்ப்பினை உருவாக்கி, அதன் ஊடாகவும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டும் பல தொழில் வழங்குனர்களை உருவாக்குவதற்கு நாங்கள் திட்டவரைபுகளை கொண்டிருக்கின்றோம்.
எனவே, தேசிய மக்கள் சக்தி கூறுகின்றது போல் எமது சம்மாந்துறை பிரதேச சபை அமையாது மாற்றமாக எமது பிரதேச சபையானது இலங்கையில் காணப்படுகின்ற பிரதேச சபைகளுக்கெல்லாம் மாதிரி பிரதேச சபையாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
அரசியல் மேடைகளில் கூறுவது போன்று பழைய பஞ்சாங்கக் கதைகளை உரிமைகளை வென்றெடுப்போம் எமக்கான குரல்களாக ஒலிப்போம் என்கிற சொற்பதகங்களை மறந்து அவற்றோடு சேர்ந்த அபிவிருத்தி வாழ்வாதாரம் அனைத்தையும் உருவாக்கி, எமக்கென ஓர் அரசியல் கட்டமைப்பின் ஊடாக ஒரு சமூகத்தை முன்கொண்டு செல்ல நாங்கள் அனைத்து திட்டங்களையும் வகுத்து இருக்கின்றோம். அதற்கான பாரிய முன்னேற்பாடுகளுடானான திட்டநகர்வுகள் அனைத்துமே செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சமூக அபிவிருத்தி என்பது நாட்டின் ஆட்சியாளர்களால் வழங்கப்படுகின்ற நிதிகளைக் கொண்டு ஒருபோதும் நிவர்த்தி அடையாது. மாறாக எங்களால் வெளிநாடுகள் இருக்கின்ற முதலீட்டாளர்களையும் பாரிய நிறுவனங்களையும் அணுகி, அவர்கள் ஊடாக பெறப்படுகின்ற பாரிய நிதிகளை மக்களிடம் கொண்டுவந்து சேர்த்து, அவர்களுக்கான அபிவிருத்தி மற்றும் கட்டுமானங்கள் அனைத்தையுமே உருவாக்கிக் கொடுக்கின்ற போதுதான் காலாகாலமாக மேடைகளில் இவர்களால் கட்டவிழ்த்து விடப்படும் அபிவிருத்தி என்கின்ற பொய் வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.