2025 ஆம் ஆண்டு தமிழ், சிங்கள புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்கள், இசை நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்றுகூடும் பிற நிகழ்வுகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரினால் விசேட பாதுகாப்புத் திட்டமும் போக்குவரத்து திட்டமும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கடைகளுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கோட்டை, புறக்கோட்டை (காலிமுகத்திடல்), பொரளை, கிருலப்பனை மற்றும் பம்பலப்பிட்டி பகுதிகளுக்கும், மத வழிப்பாட்டுத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கும் வருகை தரும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 6,000இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்படி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க விசேட போக்குவரத்துத் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் போக்குவரத்தை கையாளுவதற்கும் நாடு முழுவதும் 35,000இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் போக்குவரத்து பொலிஸார் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.