இறக்குமதி செய்யப்படும் அரிசியின் முதலாவது தொகுதி அடுத்தவாரம் நாட்டை வந்தடையும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசியை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, பல இறக்குமதியாளர்கள் ஏற்கனவே அரிசி இருப்புகளுக்கான கொள்வனவு கட்டளைகளை வழங்கியுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து உரிய அரிசி தொகுதிகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், அடுத்த வாரத்திற்குள், அவை நாட்டுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூர் சந்தைகளில் தற்போதுள்ள பல அரிசி வகைகளின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, 2024 டிசம்பர் 20ஆம் திகதி வரை, இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் முன்மொழிவுக்கு, டிசம்பர் 03ஆம் திகதி அன்று, அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அண்மைக்கால பாதகமான காலநிலை காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களால், 2024 டிசம்பர் 20ஆம் திகதி வரை இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிகளை பெறாமல் அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அனுமதியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய, கட்டுப்பாட்டு விலையில் அரிசி இருப்புக்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இன்றுகாலை முதல் அரிசி ஆலை உரிமையாளர்கள் இந்த ஒழுங்குமுறை விலையில் சந்தைக்கு அரிசியை விநியோகம் செய்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.