இஸ்மதுல் றஹுமான்
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டியது தொடர்பான வழக்கில் நான்கு சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்து நான்கு சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கட்டளையிட்ட கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இச் சம்பவத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. சிறி ரங்கா தொடர்பு என விசாரணையில் தெரியவந்தால் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.
கடந்த ஆகஸ்ட் 28ம் திகதி கொழும்பில் பல இடங்களில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாலுக்கு எதிராக அவரது புகைப் படத்துடன் அவரை அவமதிக்கும் விதத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதிபதி திலின கமகே முன்னிலையில் 21 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொள்ளப்பட்டது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஜே. சிறி ரங்காவை கைது செய்து விசாரணை நடாத்தி நீதிமன்றில் ஆஜர்படுத்த அவரைத் தேடி அவரது வசிப்பிடத்திற்கு சென்ற போதும் அவர் அங்கிருந்து அகன்று சென்றுள்ளார் என விசாரணை அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டதரணி மைத்திரி குணரத்ன சுவரொட்டிகள் ஒட்டியதன் பிரதான சூத்திரதாரியாக அடையாளம் கானப்பட்ட ஜே. சிறி ரங்காவை கைது செய்யாமல் சிறிய சிறியவர்களை கைது செய்தது எதற்காக என வினவினார். மேலும் தனது சேவை பெறுனர்கள் சுவரொட்டிகளை ஒட்டியதை ஏற்றுக்கொள்வதாகவும், அச்சுவரொட்டிகள் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியை அவமதிக்கும் சுவரொட்டிகள் என்று தெரியாததினால் அந்த செயல் இடம்பெற்றுள்ளது எனவும் தனது சேவை பெறுனர்களுக்கு கட்சி, நிறம் அவசியமில்லை என்றும் அவர்கள் கிடைத்த ஒப்பந்தத்துக்கு இனங்க சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதாக தெரிவித்து
பிணை வழங்குமாறு கோரினார்.
8 வது சந்தேக நபர் சுவரொட்டிகளை ஒட்டுவற்காக 5 வது சந்தேக நபருக்கு 45 ஆயிரம் ரூபா கொடுத்துள்ளதாகவும் அதனை நான்கு பேர்களும் பங்கிட்டுக்கொண்டுள்ளனர் என விசாரணை அதிகாரிகள் மன்றில்
தெரிவிதனர்.
இரு பக்க வாதங்களையும் செவிமடுத்த பிரதான நீதவான் திலின கமகே முதல் நான்கு சந்தேக நபர்களையும் தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் 25 ஆயிரம் ரூபா ரொக்கப் நிலையிலும் விடுவித்ததுடன் ஏனைய நான்கு சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் இச் சம்பவத்துடன் ஜே. சிறி ரங்கா தொடர்பு என விசாரணையில் தெரியவந்தால் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கட்டளையிட்டார்.










