கடவத்த முதல் மீரிகம வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் புனரமைப்பு பணிகள் கூட்டு நிதியத்தின் அனுமதி கிடைத்தவுடன் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன் சந்திர தெரிவித்தார்.
குறித்த கட்டுமானப் பணிகளுக்காக கூட்டு நிதியத்தின் நிதியில் இருந்து 7500 மில்லியன் ரூபாவைக் கோரி அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
குறித்த பணத்திற்கு அனுமதி கிடைத்தவுடன் வீதிப் பணிகளை ஆரம்பிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு அறிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்த முதல் மீரிகம வரையிலான பாதையின் 36 சதவீத வேலைகள் இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அந்த வீதியின் தூரம் 37 கி.மீ. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்த-மீரிகம பாதைப் புனரமைப்புக்கு பின்னர், குருநாகலிலிருந்து மத்தல மற்றும் கட்டுநாயக்க வரையிலான அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பது இலகுவாக்கப்படும்.