இஸ்மதுல் றஹுமான்
பாராளுமன்ற தேர்தலில் நாம் அரச அதிகாரத்தை கைப்பற்றுவதில்லை. பலம்வாய்ந்த எதிர்கட்சியாக செயல்படவே முயற்சிக்கிறோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா நீர்கொழும்பில் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாலர் மகாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போது கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த சகல கட்சிகளும் அமைப்புகளும் ஒரு கூட்டணியாக கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட தீர்மாணித்துள்ளோம். அதற்கான அங்கீகாரத்தை தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
சகல மாவட்டங்களிலும் பலம்வாய்ந்த அபேட்சகர்களை நிறுத்தவுள்ளோம். நானும் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகிறேன்.
தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அநுர குமார் திசாநாயக்கவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் எதிர்பார்க்கும் சகல விடயங்களையும் நிறைவேற்ற சந்தர்ப்பம் கிடைக்க வாழ்த்துகிறேன்.
நாம் நினைத்தோம் அவர் தேர்தல் மேடைகளில் கூறிய பொருளாதார கொள்கையை அமுல்படுத்துவார் என்று. ஆனால் அவர் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கைகளையே முன்னெடுத்துச் செல்வதை இட்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அதனால் அவருக்கு எமது பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.
பொருளாதாரம் தற்போது சிறந்த நிலமைக்கு வருவதும், டொலரின் பெறுமதி குறைவதும், பணவீக்கம் குறைவதும் விவசாயிகளுக்கு, மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதும் கடந்த 2 1/2 வருடங்களாக எடுத்த தீர்மாணங்களினாலாகும். இதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு கேட்கிறேன். அரசியல் மேடைகளில் சொன்னதை செய்ய முற்பட்டால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும்.
நாம் அரச அதிகாரத்தை கைபற்றுவதில்லை. பலம்வாய்ந்த எதிர்கட்சியை அமைக்கவே முயற்சிக்கிறோம். அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக நியமித்த மக்கள் திசைகாட்டிக்கே பிரதமர் பதவியையும் வழங்குவார்கள் என நம்புகிறோம். அதற்கு நாம் உதவிசெய்வோம்.
நாம் அரச அதிகாரத்தை எடுக்க எதிர்பார்க்கவில்லை. நாடு எதிர்பார்பதை செய்யத் தவறினால் எதிர் கட்சியிலிருந்து பலமாக குரல் கொடுப்போம். அவர்களைப் போல் எல்லாவற்றையும் எதிர்க்க மாட்டோம். நல்ல விடயங்களுக்கு ஒத்துழைப்போம்.
ஜனாதிபதி தேர்தலில் நாம் மூன்றாம் இடத்திற்கு வந்தோம். அந்த முடிவை பார்த்தால் எமக்கு பாராளுமன்றத்தில் 37 ஆசனங்கள் கிடைக்க வேண்டும். 58 சதவீதம் எதிர்கட்சிக்கு உள்ளது. அதில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கே நாம் முயற்சி செய்கிறோம்.
ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவத்தை வழங்குவார். பாராளுமன்றம் வரமாட்டார்.
எரிபொருள் விலை மாற்றம் தொடர்பாக அமைச்சர் விஜித்த ஹேரத் ஒன்றைச் சொல்ல கூட்டுத்தாபனத்தின் தலைவர் இன்னொன்றை கூறுகிறார். அரசாங்கத்தை நடாத்திய அனுபவம் இல்லாததினால்தான் அவ்வாறு கூறுகிறார்கள் என்றார்.