நதீரா மடுகல்ல எழுதிய பார்லிமேந்துவே பலஹத்காரய (“பாராளுமன்றத்தின் பலவந்தம் – பொலிஸ் அழைக்கப்பட்டு அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்”) என்ற நூலின் வெளியீட்டு விழா 23.07.2024 ஜனாதிபதி அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
நதீரா மடுகல்ல தனது 20 வருட அனுபவத்தினாலும், திரட்டிய அறிவினாலும் வாசகர் உலகிற்கு கொண்டு வரும் “பாராளுமன்றத்தின் பலவந்தம்” நூலானது பாராளுமன்ற வரலாற்றை பிரதிபலிக்கும் கண்ணாடியாகும்.
இந்நூலின் ஊடாக இலங்கைப் பாராளுமன்றத்தில் ஊடகங்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் தென்படாத உண்மைகளை நாட்டுக்கு வெளிப்படுத்த ஊடகங்களின் வாயிலாக முயற்சித்துள்ள நூலாசிரியர் இந்நூலின் ஊடாக மேலும் ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைத்துள்ளார்.
நதீரா மடுகல்ல களனிப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை தொடர்பான பட்டம் பெற்றுள்ளார். எழுத்து மற்றும் வெகுஜனத்துறை தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா பெற்றுள்ள அவர் வானொலி,தொலைக்காட்சி, மற்றும் பத்திரிகை துறையில் பிரபல ஊடகவியலாளராவார். அவர் தற்போது ஜனாதிபதி ஊடகப் பிரிவில் பாராளுமன்ற விவகாரங்களுக்கான பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.
இந்நூலின் முதற் பிரதி நதீரா மடுகல்லவினால் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வழங்கி வைக்கப்பட்டு பின்னர் அமைச்சர்கள் தலைமையிலான முக்கியஸ்தர்களுக்கும் பெற்றோருக்கும் நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன. நூல் வெளியீட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் பிரதான உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற பாரம்பரியம் மற்றும் ஜனநாயக உரிமைகள் குறித்து ‘பாராளுமன்றத்தின் பலவந்தம்’ நூல் சுவாரஸ்யமாக மக்களை சென்றடையும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்நூலின் ஊடாக பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் நல்லதொரு கருத்தை சமூகத்திற்கு வழங்குவதற்கு எழுத்தாளர் நதீரா மடுகல்ல முயற்சித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.