சுஐப்.எம்.காசிம்-
இலங்கையின் இலக்கிய உலகம் விலை பேசப்படுகிறதா? அல்லது கனதியில்லாத கனவான்களின் கையூட்டுக்களுக்குள் கட்டுண்டுவிட்டதா? புகழுக்காக பூமாலையும் பெருமைக்காக பட்டமும் ஆசைக்காக பாவோதுவதும் நிகழ்ந்து, இழி நிலைக்குள் இலக்கியப்பரப்பு புதைந்து கிடக்கிறது. ‘புதையல் தோண்ட பூதம் வந்தது’ போல, பவிசு வந்ததால் சில புகழேந்திகளும் இப்பரப்பில் நீச்சலடிக்கின்றனர். இவர்கள் புரவி பாய்வது போல ஓடியோடி புகைப்படத்தில் புன்னகைக்கின்றனர். தோற்றம் ஏற்றம்தான், நோக்கம்தான் நொண்டியாகிறது. தற்காலப் போட்டிக்காக கடந்த காலங்களைக் கையாளும் அற்பம் இன்னும் சொற்பம்தான்.
தாலாட்டும் மொழி “தமிழ்”. இவர்கள் நினைப்பதுபோல வாலாட்டும் மொழியல்ல. வாலைச்சுருட்டும் கோழை மொழியுமல்ல. நிதர்சனத்தை நிழலளித்துக் காக்கும் நித்திய ஒலி “தமிழ்”. எச்சிலூறுவதற்காக அச்சாறுக்கு அஞ்சலாமா? அல்லது ஆசைப்படலாமா?அகரமுகரம் தெரியாத அப்பாவி விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கியதை பாரதத்தின் சாதனை என்பானா? அல்லது புராணத்தின் போதனை என்பானா? இப்படித்தானிருக்கிறது அண்மைக்காலமாக இலக்கியப் பரப்பில் இடம்பெறுபவை.
ஆனால், யோக்கியர்கள் மட்டும் ஓரமாக ஒதுங்கி நிற்கின்றனர். மந்திரித்து ஓதியூதும் மகுடங்களை விட, நன்கறிந்து ஓதித்தௌியும் அறிவு ஆளுமையுடையதல்லவா? அலைந்து திரியும் ஆசாமிகளுக்கு இந்த அறிவு எங்கே?விக்ரம் லேண்டரின் தூரம்போலவேதான்.
எழுவாயை பின்னுக்கும் பயனிலையை முன்னுக்கும் பொருத்தினால் கவிதையாம். “சீதையைக் கண்டேன்” என்பதை “கண்டேன் சீதையை” என்றெழுதி கவிஞராகிவிடுகின்றனர். சுய நாமங்கள் சூட்டப்படும் இப்பரப்பில், நயமாக எழுதும் கவிஞர்கள் காணாமலாகின்றனர். இந்நிலை நீடித்தால் இலக்கியத்தில் இலங்கை நிலவையும் தாண்டி சூரியனுக்குச் சென்ற கதையாக சுக்குநூறாகிவிடும்.
இதில், ஒதுங்கி நின்ற யோக்கியர்கள் மாத்திரம் தப்பித்து தமிழுக்கு உயிர் கொடுப்பர், எழிலளிப்பர், ஒலி கொடுப்பர் ஏன், ஏற்றமுடன் ஔியுமூட்டுவர்.