சர்வஜன வாக்கெடுப்புக்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதிலிருந்து ஜனநாயகத்தை பேணி வந்த நாடு என்ற வகையில் இலங்கை தொடர்ந்தும் அதற்காக அர்பணிக்கும் எனத் தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்விதத்திலும் அச்சம் கொள்ள வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலான பணிகள் துறைசார் அனுபவம் மிக்கவர்களிடமே கையளிக்கப்படுமெனவும், அந்த பணிகளை கே.என்.சொக்ஸி போன்ற சட்டத்தரணிகளுடனேயே முன்னெடுத்தாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், 2015 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்ட வேளையில் சொக்ஸி இறைபதம் அடைந்திருந்த காரணத்தினால் அந்த பணிகளை சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்னவிடம் கையளிக்க வேண்டியிருந்தாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அந்த நேரத்தில் அவரின் தவறு காரணமாகவே தற்போது சிக்கலான நிலைமை உருவாகியிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அதனையிட்டு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
காலி பெலிகஹ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை 19.07.2024 திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
காலி பிரதேச மக்களின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் செயற்பாடுகளை வினைத்திறனாக்கும் நோக்கில் 1600 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய நீதிமன்ற வளாகத்தில், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம், இரண்டு மேல் நீதிமன்றங்கள், மூன்று மாவட்ட நீதிமன்றங்கள், இரண்டு நீதவான் நீதிமன்றங்கள் உள்ளன.
சட்ட உதவி மையம், சமூக சீர்திருத்த அலுவலகம், நன்னடத்தை அலுவலகம், கடன் நிவாரண சபை சட்ட உதவி உள்ளடங்களாக நீதித்துறை பணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்தக் கட்டிடத் தொகுதியில் உள்ளன.
பெயர் பலகையை திரைநீக்கம் செய்து, நீதிமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைத்த ஜனாதிபதி, கட்டித்தொகுதியை மேற்பார்வை செய்தார்.
காலி சட்டத்தரணிகளினால் இதன்போது ஜனாதிபதி நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது.