கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடும்போது, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் விவசாய ஏற்றுமதித் துறையில் தெளிவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பி.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு பதிவாகியிருந்த விவசாய ஏற்றுமதி வருமானத்தின் பாதகமான நிலைமையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகளின் காரணமாக இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் 15.07.2024 நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் பி.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி இதனைக் குறிப்பிட்டார்.
“2022 உடன் ஒப்பிடும்போது, 2023 இல் விவசாய ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ளது. அதன்படி எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள் காரணமாக 2024 இன் முதல் ஆறு மாதங்களில் விவசாய ஏற்றுமதித் துறையில் தெளிவான வளர்ச்சியை உருவாக்க முடிந்தது.
இக்காலத்தில் நிலவிய காலநிலை விவசாயத்துக்கு சாதகமாக இல்லை என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட வேண்டும். இத்தகைய சவால்களை எதிர்கொண்டு அடைந்த முன்னேற்றம் உண்மையில் வெற்றியாகும் என்பதையும் கூற வேண்டும்.
உதாரணமாக, 2023 ஏப்ரல் மாதமாகும்போது, தேயிலை மூலம் கிடைத்த 407.6 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம், 2024 ஏப்ரல் மாத்தில் 450.5 மில்லியனாக அதிகரித்துள்ளது.
மேலும், 2023 ஏப்ரல் மாதத்திற்குள் தேங்காய் ஏற்றுமதி மூலம் 212 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்தது. அது 2024 ஏப்ரல் மாதமாகும்போது 263 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
2023 ஏப்ரல் மாதத்தில் 299 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த இறப்பர் ஏற்றுமதி வருமானம் 2024 ஏப்ரல் இல் 335 மில்லியனாக அதிகரித்துள்ளது.
மேலும், இதே காலப்பகுதியில் கறுவா ஏற்றுமதி வருமானம் 53.3 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 56.1 மில்லியனாகவும், மிளகு ஏற்றுமதி வருமானம் 13.3 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 14 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது.
விவசாயமானது தொடர்ந்து ஏற்ற இறக்கம் ஏற்படும் துறையாகும். கடந்த காலத்தில் தேயிலை உற்பத்தி குறைந்ததால் உரத்தின் தேவை அதிகரித்தது. அதன்படி உரம் வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம். ஒவ்வொரு 50 கிலோ உர மூட்டைக்கும் 2000 ரூபாய் மானியத்தில் உரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
தற்போது, 10,000 மெட்ரிக் தொன் தேயிலை உரம் பயிர்ச்செய்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. எஞ்சிய 20,000 மெட்ரிக் தொன் மேற்குறிப்பிட்ட தரப்பினருக்கு மேலதிகமாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களை இணைத்துக் கொண்டு, உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மொத்தமாக தேயிலை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், 2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 745 ஹெக்டேயரில் தேயிலை மீள் நடுதல் மற்றும் நேரடி பயிர்ச்செய்கை தொடர்பான மானியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன் கீழ் 324 விவசாயிகளுக்கு 140 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கு 60 மில்லியன் ரூபாயை ஒதுக்கி 800,000 தேயிலை செடிகளை நடும் புதிய திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை தேயிலைச் சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை நேரடி தேயிலை பயிர்ச்செய்கை திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. இதற்காக 750 மில்லியன் ரூபாய் பயன்படுத்தப்படவுள்ளது.
தற்போது, தேங்காய் சிரட்டை மற்றும் தேங்காய் மட்டை சார்ந்த உற்பத்திகளும் இந்நாட்டிற்கு வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித் தருகின்றது. 2022 ஆம் ஆண்டில், தேங்காய் சார்ந்த ஏற்றுமதி மூலம் 817 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், வெள்ளைப் பூஞ்சு நோய் காரணமாக தேங்காய் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் கூட, சரியான ஒழுங்குபடுத்தல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பயன்படுத்தியன் ஊடாக 700 மில்லியன் அமெரிக்க டொலரை நாட்டிற்கு வருமானமாகக் கொண்டு வர முடிந்தது. 2024 ஏப்ரல் மாத நிலவரப்படி, 263.06 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டுள்ளதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24% வளர்ச்சியாகும்.
2022, 2023 ஆம் ஆண்டுகளில் பயிரிடப்பட்ட, புதிய இறப்பர் பயிர் பரப்பளவு 921 ஹெக்டேயராகவும், மீள் நடவு செய்யப்பட்ட இறப்பர் பரப்பளவு 2743 ஹெக்டேயராகவும் உள்ளது. 2024 இல் 1135 ஹெக்டேயர் இறப்பர் பயிரிட திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
அதில், 605 ஹெக்டேயரில் புதிதாகப் பயிரிடலும், 415 ஹெக்டேரில் மீள்நடுகையும் செய்யப்படும். இதற்காக பயிர்ச்செய்கைக்குத் தேவையான செடிகளை வழங்குவதற்கு 149 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னர் காணப்பட்ட இறப்பர் விவசாய மானிய முறை 2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படாது. மேலும் 2023 ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு மானியமாக திணைக்களம் இலவசமாக செடிகளை வழங்குகின்றது.”