ஈரானிய பதில் வெளிவிவகார அமைச்சர் அலி பகேரி கனிக்கும் ( Ali Bagheri Kani ) வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் இரு தரப்பு உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ரஷ்யாவில் இடம்பெறும் பிரிக்ஸ் நாடுகளின் அமைச்சர்கள் மட்ட மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சர்வதேச பிரச்சினைகள் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், மறைந்த ஈரானிய ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரின் இறுதிச் சடங்கில் இலங்கைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை மற்றும் நாட்டில் தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்தியமைக்காக ஈரானிய பதில் வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
மறைந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்ததை நினைவுகூர்ந்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அவரது விஜயம் நிலையான உறவுகளை வளர்ப்பதற்கு இரு தரப்பினரதும் உறுதிப்பாட்டின் அடையாளம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் ஆகியோரின் மதிப்புமிக்க பாரம்பரியத்தை பாதுகாத்து மேம்படுத்த பாடுபட்டாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.