நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதிஉதவியுடன் 3329 மில்லியன் ரூபா செலவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இருதய மற்றும் சிறுநீரக நோய் பிரிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் 26.05.2024 திறந்து வைக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது இந்த திட்டத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த புதிய மூன்று அடுக்கு கட்டிடத்தில் இருதய சிகிச்சை பிரிவு, ஆய்வு கூடம்(Cath Lab), கார்டியோடோராசிக் தியேட்டர் (Cardiothoracic theatre), இருதய அவசர சிகிச்சைப் பிரிவு (Cardiac ICU), எக்கோ கார்டியோகிராபி (Echo Cardiography), உடற்பயிற்சி ECG,நடமாடும் இரத்த அழுத்த கண்காணிப்பு பிரிவு (Ambulatory BP Monitoring),நடமாடும் ECG கண்காணிப்பு பிரிவு(Ambulatory ECG monitoring),போன்ற நவீன வசிகள் உள்ளன. சிறுநீரகவியல் பிரிவில் டயாலிசிஸ் பிரிவு, ஸ்கேன் அறை மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான விசேட வசதி அறை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு போன்ற வசதிகள் உள்ளன.
பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் பிரிவு அடங்கிய புதிய கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, வடமாகாண மக்களுக்காக நெதர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவின் கீழ் கிடைத்துள்ள இந்த சுகாதார வசதிகளை மேலும் மேம்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
வடமாகாண மக்களுக்காக நவீன மற்றும் அதிநவீன வைத்தியசாலை கட்டமைப்பு வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஏ9 வீதியில் பலப்படுத்தப்பட்டுள்ள இந்த நவீன வைத்தியசாலை கட்டமைப்பு இந்நாட்டின் மருத்துவ சுற்றுலா வர்த்தகத்திற்கு பெரும் உறுதுணையாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இப்பிரிவு திறக்கப்படுவதன் மூலம் வடமாகாண சுகாதார சேவை தொடர்ந்து மேம்படுத்தப்படும். மன்னார் மாவட்ட வைத்தியசாலையை புனரமைத்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இந்த மருத்துவப் பிரிவை நிர்மாணிப்பதற்காக அப்போதைய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் நான் நெதர்லாந்து அரசாங்கத்துடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கு பாடுபட்டேன். இன்று அதனைத் திறந்து வைப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்காக தங்களை அர்ப்பணித்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.
பொறுமையுடன் இந்தத் திட்டத்தை நிறைவு செய்வதற்குப் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவையை வலுப்படுத்த நெதர்லாந்து அரசாங்கம் பரந்த பங்களிப்புகளை செய்துள்ளது. தற்போது யாழ்ப்பாண வைத்தியசாலையுடன் பருத்தித்தறை வைத்தியசாலையும் வடமாகாண மக்களுக்கான சுகாதார வசதிகளை வழங்கி வருகிறது.
ஏ9 வீதி இலங்கையின் முதுகெலும்பைப் போன்றது. அந்த வீதியின் ஊடாக வவுனியா, மாங்குளம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் மூன்று நவீன வைத்தியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கராபிட்டி வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றிய பின்னர் யாழ்ப்பாண வைத்தியசாலையையும் தேசிய வைத்தியசாலையாக மாற்ற தீர்மானித்துள்ளோம்.
மேலும், ஏ9 வீதியின் அடுத்த நிறைவில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை உள்ளது. அத்துடன் வவுனியா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்து போதனா வைத்தியசாலையாக மாற்றுமாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் என்னிடம் கோரியிருந்தார். அநுராதபுரத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் 65 கி.மீ தூரம் மட்டுமே உள்ளது. இன்று இந்த மாகாணம் மிகவும் வலுவான மருத்துவமனை கட்டமைப்பை பெற்றுள்ளது. இது கொழும்பிற்கு வெளியே வேறு எந்த மாகாணத்திலும் பார்க்க முடியாத நிலை என்றே கூற வேண்டும்.
வடமாகாண மக்களுக்கான இந்த சுகாதார சேவைகளை எவ்வாறு மேலும் வலுப்படுத்துவது என்பதை நாம் ஆராய வேண்டும். கொழும்பைத் தவிர, அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் வரையான ஏ9 வீதியும் சுகாதாரப் பாதுகாப்பின் முக்கிய மையமாக மாறியுள்ளது. மேலும் இதன் மூலம் மருத்துவ சுற்றுலாவுக்கு பல வாய்ப்புகள் உருவாகியுள்ளன. மேலும், இந்நாட்டு மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான முக்கியமான திட்டமாக இது அமையும். இந்த திட்டத்தை மேலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தத் திட்டத்தைத் தொடர நெதர்லாந்து அரசாங்கம் எதிர்காலத்தில் எங்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.