வட.மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதி செய்யும் வகையில் யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை கட்டிடத்தை 24.05.2024 முற்பகல் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
பொறியியல் பீடங்கள், மருத்துவ பீடங்கள், விஞ்ஞான பீடங்கள், விவசாய பீடங்கள் உட்பட விஞ்ஞான பாடங்களை அடிப்படையாக கொண்ட இந்த நாட்டில் உள்ள அனைத்து பீடங்களும் தற்போது பழைய தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதாகவும், புதிய உலகிற்கு ஏற்றவகையில் இந்த தொழில்நுட்பத்தை மாற்றியமைக்க வேண்டுமெனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க சுட்டிக்காட்டினார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பிள்ளைகள் தமது திறமையை வெளிப்படுத்துவது இந்த நுட்பத்தைப் கற்பதன் மூலம் அல்ல. அது அவர்களின் அறிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்பதை மேலும் சுட்டிக்காட்டிய அவர், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்நாட்டில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து இது தொடர்பான பரிந்துரைகளை தயாரித்து தமக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.
மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை கட்டிடம், 46 வருடங்களின் பின்னர் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது கட்டிடம் இதுவாகும். இதற்காக 942 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் துறை கட்டிடம் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் பயிற்சிக்காக 1200 மாணவர்களுக்கு இடமளிப்பதுடன் சர்வதேச ஆராய்ச்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க உதவுகிறது.
6000 சதுர மீட்டர் கட்டிடத்தில் பல விரிவுரை நிலையங்கள், மருத்துவ திறன்கள் ஆய்வகங்கள் மற்றும் கேட்போர் கூடமும் உள்ளது. அறுவை சிகிச்சை நிலையங்கள், மீட்பு அறைகள், சுத்தம் செய்யும் பகுதிகள், அகற்றல் பகுதிகள், ஸ்டெரிலைசேஷன் பிரிவுகள், தயார்ப்படுத்தல் அறைகள் மற்றும் களஞ்சிய வசதிகள் ஆகியவையும் இதில் உள்ளடங்கும்.
நோயாளிகள் தங்கும் அறைகள், ஆலோசனை அறைகள் மற்றும் எண்டோஸ்கோபி, வாஸ்குலர் அறுவை சிகிச்சை மற்றும் மேமோகிராபிக்கான சிறப்புப் பிரிவுகள், ஆராய்ச்சி ஆய்வகங்கள், தடயவியல் விசாரணைப் பிரிவு மற்றும் அருங்காட்சியகம் ஆகியவையும் இதில் அடங்கும்.
மகப்பேற்று மருத்துவத் துறையால் நிர்வகிக்கப்படும், கருவுறுதல் பராமரிப்புப் பிரிவு சிறப்பு ஆலோசனைகள், நோயறிதல் சேவைகள் மற்றும் சிகிச்சை வசதிகள் உள்ளிட்ட விரிவான சேவைகளை வழங்கும். மருத்துவ பரிசோதனை பிரிவு (CTU) உள்நாட்டில் அறியப்பட்ட நோய்களுக்காக குறைந்த செலவில் செய்யக்கூடிய சிகிச்சைகள் பற்றிய மருத்துவ ஆராய்ச்சிக்கு வசதிகள், மருத்துவ மரபியல் பிரிவு (CGU) மரபணு நோயறிதல் மற்றும் நோயாளர் பராமரிப்பு வசதிகளுடன் நோய் தடுப்புக்கான அறிவையும் வழங்கும்.
பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, புதிய கட்டிடத்தை மேற்பார்வையிட்டார்.