ஈரானிய ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி அவர்களுடைய ஜனாஸா நல்லடக்கம் 22.05.2024 நடைபெற்றது.
மேற்கத்தைய ஊடகங்கள் அவரது இறப்பு ஊர்ஜிதம் செய்யப்பட முன்பிருந்தே ஈரானில் பெரும் அதிகாரப் போட்டியையும் ஸ்திர மற்ற தன்மையையும் இது தோற்றிவிடும் என்ற பரப்புரையை ஏற்படுத்தி விட்டிருந்தன. அது இன்னும் உக்கிரமாக தொடர்ந்த வண்ணமுள்ளது.
மிகவும் பலவீனமடைந்த ஒரு ஈரான் தான் ஆயுத பலம் பொருந்திய சில மேற்கு நாடுகளின் நீண்ட நாள் கனவாகும். இஸ்ரேல் நடத்தும் பாலஸ்தீனம் மீதான குரூர தாக்குதல்களுக்கும் அவை உருவாகியுள்ள மனித அவலங்களுக்கும் எதிர்வினை யாற்றும் திறனை ஈரான் கொண்டிருப்பது அவர்களது பூகோள அரசியல் மூலபாயங்களுக்கு காத்திரமானதல்ல என்று வெளிப்படையாகவே எழுதப்படுவதைக் காணலாம்.
அதே வேளை, அவர்கள் எதிர்பார்க்கும் வகையில் பலவீனமடையக் கூடிய ஈரான், யதார்த்தத்தில் பெரும்பாலும் பிராந்திய ரீதியில் பலமடைந்த ஈரானாக அமைந்து விடும் என்ற கவலை அவர்கள் மத்தியில் கருக் கொண்டிருப்பது கண்கூடாகும். பிராந்திய ரீதியில் ஒரு போர்ச் சூழல் அதிகரிப்பாக இது ஆகிவிடக் கூடாது என்ற வகையில் சில முஸ்தீபுகளை அத்தகைய நாடுகள் செய்து வருவது தெரிந்ததே.
இஸ்ரேலுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டு உள்ளும் வெளியும் தார்மீக வலுவை இழந்தவாறுள்ள அமெரிக்கா, மத்திய கிழக்கின் பிராந்திய போர்ச் சூழலுக்குள் அல்லது ஒரு உலகப் போருக்குள் தள்ளப்பட்டு விடக்கூடாது என்ற அங்கலாய்ப்பில் உள்ளது. சில அமெரிக்க அரசியல் ஆய்வாளர்கள் நெதன்யாஹூ வினுடைய சூழ்ச்சி அல்லது எதிர்பார்ப்பு அமெரிக்காவை அத்தகைய போர்ச் சூழலில் நேரிடையாக ஈர்த்து விடுவதுதான், ஆகவே அதையிட்டு அமெரிக்கா கவனமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்து வருகின்றனர்.
எது எவ்வாறாயினும், இஸ்ரேலும் அசர்பைஜானும் வலுவான இராஜதந்திர மற்றும் இராணுவ உறவுகளைப் பேணி வருகின்ற நாடுகளாகும். அண்மைக்கால பூகோள அரசியல் அவதானிப்புகளில் ஒன்றாக அமெரிக்காவும் நேட்டோ நாடுகள் சிலவும் அசர்பைஜானுடனான உறவுகளை விஸ்தரித்துக் கொண்டுள்ளன என்ற தகவல் வெளிப்பட்டுள்ளது. ஆர்மீனிய – அசர்பைஜான் அரசியல் மற்றும் இராணுவ நெருக்கடிகளின் போது எப்பொழுதும் ஆர்மீனியாவுக்கு அனுதாபமாகபவிருந்த ஈரான், தனது வெளியுறவுக் கொள்கையின் புதிய யுக்தியாக, அசைபைஜானை இராஜதந்திர ரீதியாக வென்றெடுக்கும் அல்லது நடுநிலையாக்கும் முயற்சிகளில் கரிசனை காட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.
ரைசி அவர்கள் மிக அண்மைக் காலத்தில் பாகிஸ்தான், இலங்கை போன்ற நட்பு நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்டதுடன், இந்தியாவுடனான உறவுகளை மேலும் விஸ்திரப்படுத்திக் கொண்டதையும் காணக் கூடியதாகவிருந்தது. தவிர, ஓமான் போன்ற நாடுகளுடனும் உறவுகள் பலப்படுத்தப் பட்டிருந்தன. தென் ஆப்பிரிக்காவும் ஈரானும் இன்று மிகச் சிறந்த இரு தரப்பு உறவுகளைப் பேணி வருகின்றன.
ஜனாதிபதி ரைசி அவர்களின் தொலைநோக்குள்ள பாதுகாப்பு உபாயமாக, ஈரானை அண்மியுள்ள நாடுகளுடனான உறவுகளை இயன்றளவு பலப்படுத்தும் முயற்சிகள் அமையப் பெற்றன. கடாருடன் ஈரானுக்கு இறுக்கமான உறவுகள் உள்ளன. சவூதி அரேபியா, பலஸ்தீனம் மீது ஈரான் காட்டும் ஆர்வத்தை விரும்பாத போதும், பலஸ்தீனத்திக்கு எதிரான (இஸ்ரேலுக்கு ஆதரவான) அமெரிக்க முன்னெடுப்புகளை முழுக்க நிராகரிக்க முடியாதுள்ள போதும், ஈரான் மீது முன்னர் போல் பகைமை உணர்வுகளை வன்மையாக இதுவரை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
சவூதி உட்பட ஏனைய அரபு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புணர்வு நிலை, அரபு மக்கள் மத்தியில் அந்தந்த நாடுகளின் கையாலாகா தன்மை பற்றிய அதிருப்திக்கு வித்திட்டதுடன், ஈரானின் செயற்பாடுகளை உள்ளூர நேசிக்கவும் வைத்துள்ளன. இது அரபு நாடுகளில் ஈரானுக்கு கிடைத்த பெரும் வெற்றி எனலாம்.
இந்த புதிய மாற்றங்கள், அணுகு முறைகள் என்பன ஜனாதிபதி ரைசி அவர்களின் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு மூலோபாயங்கள் காரணமாக சாதியமாக்கப்பட்டவை எனலாம். அவர்களுடன் உயிர்நீத்த வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல்லாஹ்யான் இதற்கு மேற்கொண்ட பிரயத்தனங்கள் எண்ணிலடங்காதவையாக அமையக்கூடும்.
இது தவிர, ஈரானிய அரச தலைவர் ஒருவர் அந்த நாட்டின் ஆன்மீகத் தலைவரை பிற்காலத்தில் பிரதீடு செய்யக்கூடிய தன்மை கொண்டவர் என பேசப்படுவது மிக மிக அரிதாகும்.
உயிர் நீத்த ஈரானிய ஜனாதிபதி துணிச்சல் மிக்கவர். பெரும்பாலான அரபு உலகின் தலைவர்கள் போல் அல்லாது, தனித்துவமான உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகளை கொண்டிருந்த ஒரு தேசத்தின் தலைவர். அரபு தலைவர்களும் ஏனையோரும் அவரிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ளும் மனச் சார்பு கொண்டர்வர்களல்ல.
அல்லாஹ் ரைசி அவர்களுக்கும் அவருடன் உயிர்நீத்த அனைவருக்கும் உயரிய சுவர்க்கத்தை அருள்வானாக!
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
A.L.A. Azeez