டெல்லி: இந்தியாவின் 77வது குடியரசு தினம் நாடு முழுக்க 26.01.2026 கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த நாளான குடியரசு தினத்தையொட்டி இன்று டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கொடி ஏற்றி வைக்கிறார். இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள்.
ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானங்கள், டி-90 பீரங்கிகளும், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்கள், மத்திய அமைச்சகங்கள் சார்பில் 30 அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் வர உள்ளன. இதேபோன்று 2,500 கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், ரஃபேல், சுகோய் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நாட்டின் 77 ஆம் ஆண்டு குடியரசு தின விழா நாடு முழுக்க உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுவிட்டன. இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள். ஐரோப்பிய இந்திய உறவுகளை மேம்படுத்துவது, வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்த அழைப்பானது விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குடியரசு தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், உயரதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
இன்று காலை 10.30 மணியளவில் டெல்லி கடமைப் பாதையில் ராணுவ அணிவகுப்பு தொடங்க உள்ளது. பிரதமர் மோடி இதற்காக காலை 9.30 மணியளவில் போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்த உள்ளார். இதனை அடுத்து திரவுபதி முர்மு தேசியக் கொடியினை ஏற்றி வைப்பார். அப்போது தேசிய கீதம் இயக்கப்படும். பின்னர் 21 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்படும்.
நடப்பு ஆண்டில், ‘150 ஆண்டுகால வந்தே மாதரம்’ மற்றும் ‘தற்சார்பு இந்தியா’ என்ற மையக்கருத்துக்களின் அடிப்படையில் குடியரசு தின விழாவானது கொண்டாடப்படுகிறது. அரசின் திட்ட பயனாளிகள் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு விருந்தினர்களாக இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். ராணுவ அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
குறிப்பாக ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானங்கள் அணிவகுப்பில் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று டி-90 பீரங்கிகளும் அணிவகுப்பில் இடம்பெறுகின்றன. நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை விளக்கும் வகையில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களின் சார்பில் சுமார் 30 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் வர உள்ளன. தொடர்ந்து குடியரசு தின விழாவில் 2,500 கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ரஃபேல், சுகோய் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 29 ஆம் தேதி விஜய் சவுக் பகுதியில் நடைபெறும் பாசறை திரும்புதல் நிகழ்ச்சியுடன் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நிறைவடையும்.










