இஸ்மதுல் றஹுமான்
7 கோடி ரூபா மதிப்புள்ள குஷ் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானப் பயணி எதனையும் வெளிப்படுத்தாமல் கிறீன் செனல் ஊடாக வெளியேறும் போது சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் புதன்கிழமை கைது செய்தனர்.
நீர்கொழும்பு, குடாப்பாடு பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றை நடாத்தும் ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது வர்த்தகரே கைது செய்யப்பட்டார்.
இவர் இந்த குஷ் போதைப்பொருளை தாய்லாந்து நாட்டின் பெங்கொக் நகரில் கொள்வனவு செய்து இந்தியாவின் புதுடில்லிக்கு வருகைதந்து அங்கிருந்து இந்திய விமான சேவையின் ஏ.ஐ.- 277 இலக்க விமானத்தில் 7ம் திகதி காலை 7.33 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவர் அங்கிருந்து எதனையும் வெளிப்படுத்தாமல்
கிறீன் செனல் ஊடாக வெளியே செல்ல முற்பட்ட போது சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி பரிசோதித்துள்ளனர்.
அவர் கொண்டுவந்த இரண்டு பயணப் பொதிகளில் காற்று புகாதவாறு காபன் பேப்பரினால் சுற்றப்பட்ட 15 பார்சல்களில் குஷ் போதைப் பொருள் 7 கிலோ கிராம் 70 கிராம் கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட போதைப் பொருள் பக்கட்டுகளுக்கு மேலால் இனிப்புப் பண்டங்கள் அடங்கிய பகட்டுகள் பெரிய அளவில் வைத்து மறைத்து வைத்திருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவருக்குத் தெரிந்த தற்போது தாய்லாந்தில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவரால் இந்த போதைப்பொருள் அடங்கிய பொதியை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக
சுங்கத் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடித்துவதற்காக கைது செய்யப்பட்ட நபரையும் கைபற்றப்பட்ட போதைப் பொருளையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.










