இஸ்மதுல் றஹுமான்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் 21 கோடி 50 இலட்சத்து 24 ஆயிரம் 575 ரூபா 35 சதம் பெறுமதியான 24 கரட் 51 தங்க பிஸ்கட்டுகளை விமான நிலையத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும்போது விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார்.
இவர் 51 தங்க பிஸ்கட்டுகளையும் தனது இரு கால்களிலும் வைத்து பேண்டேஜ்ஜால் சுற்றிக்கட்டி அதற்கு மேலால் காலுறைகளை அணிந்துகொண்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊழியர்கள் வெளியேறும் விசேட வாயிலூடாக வெளியே செல்லும் போது நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.50 மணியளவில் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பாதுகாப்பு அதிகாரி நீர்கொழும்பு, கந்தவள பிரதேசத்தில் வசிக்கும் 54 வயது நபராவர்.
அவர் சிவில் விமான பாதுகாப்பு சேவைகள் அமைப்பின் தலைவராக செயல்படுகிறார்.
இந்த தங்க பிஸ்கட்கள் 05 கிலோ கிராம் 941 கிராம் நிறையுடையது. யாராவது நபர் ஒருவர் இதனை வெளியே எடுத்து வருமாறு ஒப்படைத்திருக்கலாம் என்றும் இவர் நீண்ட காலமாக இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை தடுத்து வைத்து, இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.