தற்போது 3 லட்சத்திற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும், அவற்றை அடுத்த மூன்று மாதங்களில் அச்சிடப்பட்டு விநியோகிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் ஆலோசனைக் குழுவில் பங்கேற்ற போதே அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர்.
அதேபோல், பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்ட புதிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் இந்த ஆண்டு அச்சிடப்பட்டு வழங்கப்படும் என அமைச்சு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடுவதற்கு தேவையான ஒரு மில்லியன் கார்டுகளை பெற்றுக்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துள்ளதாக அவர்கள் குழுவிற்கு தெரிவித்தனர்.
காத்திருப்பு பட்டியலில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை விரைவாக வழங்குவதற்காக, ஒவ்வொரு மாகாணத்திலும் அச்சு இயந்திரம் ஒன்றை நிறுவுமாறு குழுத் தலைவர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், வாகன இலக்கத்தகடுகள் வழங்குவது தொடர்பாகவும் அவர் அதிகாரிகளிடம் விசாரித்தார்.
அதற்கு பதிலளித்த அதிகாரிகள், தற்போது விநியோகஸ்தர் ஒருவரை தேர்ந்தெடுக்கும் செயல்முறை நடைபெற்று வருவதாகவும், அமைச்சரவை அங்கீகாரத்துடன் இந்த செயல்முறை முடிவடைந்த பின்னர் இலக்கத்தகடுகள் வழங்கும் செயல்முறையை ஆரம்பிக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.
தற்போது செயல்படுத்தப்படும் பயணிகள் போக்குவரத்து தொடர்பான ஒருங்கிணைந்த கால அட்டவணை பற்றியும் இதன்போது விவாதிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த கால அட்டவணையை செயல்படுத்துவது ஒரு கொள்கையாக இருப்பதால், அதில் உள்ள குறைபாடுகளை அடையாளம் கண்டு, பயணிகளுக்கு மிகவும் திறமையான சேவையை வழங்குவதற்காக, எதிர்காலத்தில் மேலும் பல பிரதேசங்களுக்கு இதனை அறிமுகப்படுத்த தயாராக உள்ளதாக குழுத் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், தண்டவாளங்களில் யானைகளுக்கு ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்காக ஒரு பரீட்சார்த்த திட்டம் தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார்.
அதன்படி, 2.8 மில்லியன் ரூபா செலவில், மட்டக்களப்பு வழித்தடத்தில் இயங்கும் ரயில்களுக்கு தொலைவு பார்வை தொழில்நுட்பத்துடன் கூடிய கெமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம், யானைகள் ரயில்களுடன் மோதுவதை குறைக்கும் வாய்ப்புகள் குறித்து கண்காணிக்கப்படும் என குழுத் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கு தேவையான தீர்வுகள் பற்றியும் குழுவில் விரிவாக விவாதிக்கப்பட்டது.