ஐ. ஏ. காதிர் கான் –
கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரபுக் கல்லூரி மற்றும் பேருவளை ஜாமிஆ நழீமிய்யா ஆகியவற்றிலிருந்து பட்டம் பெற்று வெளியேறிய மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த உலமாக்களும், அஷ்ஷெய்ஹ்குகளும், கல்வியாளர்களும் விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இச்சிறப்பு வைபவம், அகில இலங்கை ஜம் – இய்யத்துல் உலமாவின் மினுவாங்கொடை கிளையின் ஏற்பாட்டில், அதன் தலைவர் அஷ்ஷெய்ஹ் மௌலவி ரிஸ்வான் தலைமையில், கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசலில், 23.02.2024 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.
இச்சிறப்பு நிகழ்வில், இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள முன்னணி அரபுக் கல்லூரிகளிலிருந்தும் பட்டம் பெற்று வெளியேறி, கௌரவிப்பிற்காக அழைக்கப்பட்ட 20 உலமாக்கள், தமது தந்தையர்களுடன் வந்து விருதுகளையும், பரிசில்களையும் பெற்றுச் சென்றனர்.
இதேவேளை, கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசலின் கீழ் இயங்கிவரும் ஹஸனிய்யா தக்கியாப் பள்ளிவாசலில் சுமார் 12 வருடங்களாக இமாமாகக் கடமையாற்றிவிட்டு, அங்கிருந்து விடைபெற்றுச் சென்ற அஷ்ஷெய்ஹ் மௌலவி எம்.எம்.எம். சப்ரியும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும், இப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்லொழுவை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களாகக் கடமையாற்றி தற்சமயம் அதிபர் நியமனம் பெற்று மல்வானை மஹ்மூத் மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றும் எம்.எம்.எம். ரிம்ஸான் மற்றும் கள் – எலிய அலிகார் தேசிய பாடசாலையில் பிரதி அதிபராகக் கடமையாற்றும் எம்.எஸ்.எம். சஸ்ரின் ஆகியோரும் இச்சிறப்பு வைபவத்தின்போது விருதுகளும் பரிசில்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் இச்சிறப்பு நிகழ்வின்போது, பல உலமாக்களை உருவாக்கிய கல்லொழுவை நிழாமிய்யா அரபுக் கல்லூரியின் ஸ்தாபகரும், தலைவரும் இன்றைய நிகழ்வின் பிரதம அதிதியுமான அல்ஹாஜ் ஏ.எச்.எம். முனாஸ், பொன்னாடை போர்த்தப்பட்டு மற்றும் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.