இஸ்மதுல் றஹுமான்
குஷ் போதைப் பொருளை இலங்கைக்குள் கொண்டுவர மூன்று பெண்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச் சாட்டில் நீர்கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரையும் மேலும் ஒருவரையும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு பெற்று விசாரித்து வருகின்றனர்.
தாய்லாந்தில் இருந்து இந்தியா ஊடாக 12 கிலோ கிராம் குஷ் போதைப் பொருளை மின்சார உபகரணங்களில் மறைத்து வைத்து கொண்டுவந்த தாய், மகள் உட்பட மூன்று பெண்களை திங்கட் கிழமை காலை சுங்க அதிகாரிகள் விமான நிலையத்தில் கைது செய்தனர்.
அப் போதைப் பொருளை விமான நிலைய வருகை முனையத்திற்கு வெளியே விராந்தையில் வைத்து அதனை எடுத்துச் செல்ல வந்த இவ் இருவரையும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணை நடாத்தியதன் பின்னர் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகள் சந்தேகநபரான நீர்கொழும்பு மாநகர சபைக்கு இம்முறை போட்டியிட்டு தோல்வியடைந்தவரும்
முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஒருவரையும் நீர்கொழும்பு மீரிகம வீதியைச் சேர்ந்த மற்றயவரையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி சுதர்ஷிமா பிரேமரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
குஷ் போதைப் பொருளை இலங்கைக்குள் கொண்டுவர உதவி ஒத்தாசை புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோரினர்.
சந்தேக நபர்கள் இருவரையும் ஏழு நாள் தடுத்து வைத்து விசாரிக்க மேலதிக நீதிபதி தடுப்புக் காவல் உத்தரவை வழங்கினார்.