இஸ்மதுல் றஹுமான்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணிக் கட்சியும் இணைந்து நடத்திய முதலாவது மக்கள் பேரணி சனிக்கிழமை (08) பிற்பகல் 2.00 மணியளவில் பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை நகரில் இடம்பெற்றது.
“நாட்டிற்கு வெற்றி – ஒன்றிணைந்து பயணிப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ் பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமான அம்பலாந்தோட்டை மக்கள் பேரணிக் கூட்டமானது, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
புதிய கூட்டணி வேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து நடாத்திய முதலாவது பொதுக்கூட்டத்தில் 20 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டமை இங்கு விசேட அம்சமாகும். எதிர்காலத்தில் இந்த வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பரந்த கூட்டணியை கட்டியெழுப்புவோம் என கூட்டமைப்பின் தலைவர்கள் இங்கு உறுதியளித்தனர்.
இந்நிகழ்வில், நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன,, துமிந்த திஸாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, நளின் பெனாண்டோ, அநுர பிரியதர்ஷன யாபா, நிமல் லான்சா, ஜோன் சேனவிரத்ன, சாமர சம்பத் தசநாயக்க, சுரேன் ராகவன், உதயகாந்த குணதிலக்க, பிரியங்கர ஜயரத்ன, ஜகத் பிரியங்கர, எஸ்.எம்.எம். முஷாரப், பிரமநாத் சி. தொலவத்த, ஜகத் புஸ்பகுமார, சுதத் மஞ்சுள உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புதிய கூட்டணி கட்சிக்கு ஆதரவளிக்கும் மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், சிவில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பெருந் திரளானோர் கலந்து கொண்டனர்.
