மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த குற்றத்திற்கான தண்டணைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கில், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் தனது தீர்ப்பை 17.11.2025 வெளியிடுவதாக அறிவித்திருந்தது.
அதன்படி, அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனா தனது ஆட்சிக்காலத்தில் (குறிப்பாக 2024 ஆம் ஆண்டு ஜூலை-ஓகஸ்ட் மாதங்களில்) நடந்த மாணவர் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்குவதற்காக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் மீதான படுகொலை, சித்திரவதை மற்றும் பொதுமக்கள் மீதான கொடூரமான தாக்குதல்களுக்கு அவரே நேரடியாக உத்தரவிட்டார் அல்லது தடுக்கத் தவறியதே அடிப்படைக் குற்றச்சாட்டுகளாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகளின்படி, இந்தப் போராட்டங்களை ஒடுக்கும்போது சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் தலைமை சட்டத்தரணி, ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் ஆவேசமாக வாதிட்டுள்ளார்.
மாணவர் போராட்டங்களை அடுத்து, ஷேக் ஹசீனா கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5 ஆம் திகதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
நீதிமன்றம் விடுத்த உத்தரவுகளையும் மீறி அவர் நாடு திரும்பாததால், அவர் இல்லாத நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த ஜூலை 2025-ல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. அவர் கைது செய்யப்படும் அல்லது சரணடையும் நாளில் இருந்து இந்தத் தண்டனை அமலுக்கு வரும் எனவும் நீதிமன்றம் கூறியது.
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இந்த வழக்கு, பங்களாதேஷ் அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. அவர் குற்றம் சாட்டப்பட்டால், ஒரு நாட்டின் உயரிய அரசியல் தலைவர் மீது இத்தகைய கடுமையான தண்டனை விதிக்கப்படுவது அரிதான நிகழ்வாக இருக்கும். தற்போதைய இடைக்கால அரசாங்கம், ஹசீனாவை நாடு கடத்துமாறு இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு சர்வதேச அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.










