அமெரிக்கப் படைகளின் தாக்குதல்களின் மூலம் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர், வெனிசுலா ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கெரகஸில் உள்ள மிராஃப்ளோரஸ் (Miraflores) மாளிகைக்கு மேலே அடையாளம் தெரியாத ட்ரோன் விமானங்கள் பறந்துள்ள நிலையில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் 05.01.2026 இரவு 8.00 மணியளவில் அதற்குப் பதிலளிக்கும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வானில் சிவப்பு விளக்குகளைக் கண்டதாகவும், வானை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதல்கள் ட்ரேசர் (Tracer) தோட்டாக்கள் போன்று தென்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டையடுத்து பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் பலர் மாளிகையை நோக்கி ஓடும் காணொளி காட்சிகளையும் வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.










