இஸ்மதுல் றஹுமான்
வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தி முரட்டுத்தனமாக நடந்து கொண்டவரை கட்டுப்படுத்த பொலிஸார் அவரின் கால் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.
சீதுவ பொலிஸ் பிரிவில் 18ம் மைல்கல், எல்லை வீதியில் வீடொன்றுக்கு வந்த நபர் ஒருவர் வீட்டை உடைத்து நொருக்கி அங்கிருந்த ஒருவரை தாக்கி குழப்பம் விலைவிப்பதாக சீதுவ பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக செயல்பட்ட பொலிஸார் 05.05.2025 திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.
பொலிஸார் அங்கு செல்லும் போதும் அந் நபர் அங்கு தங்கி இருந்துள்ளார். அவரை கட்டுப்படுத்தி அங்கிருந்து அகற்றுவதற்கு முயற்சித்த பொலிஸாரை நோக்கி அந்நபர் கத்தியால் தாக்கியுள்ளார். அச்சமயம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்தார்.
அச்சந்தர்பத்தில் பொலிஸார் அந்த நபரின் காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரும், குழப்பம் விளைவித்த நபரும் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










