இஸ்மதுல் றஹுமான்
விளக்கமறியலில் உள்ள கைதியின் கையடக்க தொலைபேசியை ஆய்வு செய்ததில் 5 கோடி 50 இலட்சம் ரூபா ஹஷீஷ் போதைப் பொருள் கண்டுபிடப்பு.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 3.8 மிமி வகை பிஸ்டல், கஞ்சா மற்றும் ஹஷீஷ் ஆகியவற்றுடன் நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய நபர் 2025 நவம்பர் 19ம் திகதி கொச்சிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியை ஆய்வு செய்தபோது இத்தாலியின் ரோம் நகரிலிருந்து அவரது பெயரில் வந்த ஒரு கொள்கலன் பற்றிய தகவல்கள் தெரியவந்தது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் பெப்ரவரி 18 ஆம் திகதி வத்தளைப் பகுதியில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்லும் நிறுவனத்தில் (Cargo) தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த கொள்கலன்
கொச்சிக்கடை பொலிஸார் மற்றும் சுங்க அதிகாரிகளால் திறந்து பரிசீலிக்கப்பட்டது.
அங்கிருந்த ஒரு இரும்புப் பெட்டிக்குள் ரகசியமாக நிரம்பூசப்பட்ட 53 பார்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் 5 கிலோ கிராம் 200 கிராம் நிறையுடைய ஹஷீஷ் போதைப் பொருள் கைபற்றப்பட்டது. இதன் சந்தை பெறுமதி 5 கோடி 50 இலட்சம் ரூபா என மதிப்பிடப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது விளக்கமறியலில் உள்ள சந்தேக நபரின் நான்கு வங்கிக் கணக்குகளை பரிசீலிப்பதற்காக
நீதிமன்ற உத்தரவை பெற்று கொச்சிக்கடை பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
குறித்த சந்தேகநபர் இத்தாலியில் இருபது வருடங்களாகப் பணியாற்றிவிட்டு நாடு திரும்பிய பின்னர் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.










