இஸ்மதுல் றஹுமான்
சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டுவந்த கைபற்றப்பட்ட 27 கோடி 40 இலட்சத்து 18 ஆயிரத்து 200 ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை முத்துராவெல மின் உற்பத்தி நிலைய ஆலையில் அழிக்கப்பட்டன.
2025 மே 25ம் திகதி முதல் 2025 ஜூலை 20ம் திகதி வரையான காலம் பகுதியில் சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட 18,26,788 வெளிநாட்டு சிகரட்டுகளை கட்டுநாயக்க சர்வதேசம் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைபற்றப்பட்டு அரச உடமையாக்கப்பட்டன. அவற்றையே இவ்வாறு அழிக்கப்பட்டதாக சுங்க ஊடக பேச்சாளரும் சுங்க பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.இந்த வெளிநாட்டு சிகரெட் தொகையை உள்ளூர் சந்தைக்கு விடுவிக்கப்பட்டிருந்தால் அதனால் அரசாங்கத்திற்கு ஏற்படும் வருமான இழப்பு 20 கோடி 56 இலட்சத்து 68 ஆயிரத்து 674 ரூபா என சுங்க பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் நாளாந்தம் இடம்பெறும் பரிசோதனை மூலமே சிகரெட்டுகளை கைபற்றி அரச உடமையாக்கப்பட்டன.
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 12 மற்றும் 43 பிரிவுகளின்படியும் 1999 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க புகையிலை சட்டத்தின்படியும் இலங்கைக்குள் சிகரெட்டுகளைக் கொண்டுவருவது அல்லது இறக்குமதி செய்வது சட்டவிரோதமான செயல் என்று அவர் கூறினார்.
சிகரெட் தொகையை அழிக்கும் பணி 11ம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கெரவலப்பிட்டி திடக்கழிவு மின் நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் மேற்பார்வையிலும், புகையிலை நிறுவனத்தின் பிரதிநிதிகளின் பங்கேற்புடனும் மேற்கொள்ளப்பட்டது.