மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் அடுத்த வருடத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் கே.டீ. லால்காந்த தெரிவித்துள்ளார்.
மேலும், பாராளுமன்றத்தினூடாக பழைய விகிதாசார தேர்தல் முறைமையை நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொலனறுவை பிரதேசத்தில் நேற்று முன்தினம் (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தலை கடந்த அரசாங்கமே இடைநிறுத்தியது. பொதுவாக புதிய தேர்தலை முறைமையை கொண்டுவந்துள்ள நிலையில், தேர்தலை நடத்தும் முறையை ஏற்பாடு செய்ததன் பின்னரே பழைய முறைமையில் தேர்தலை நடத்த வேண்டும். புதிய தேர்தல் முறைமையை முறையாக மேற்கொள்ளாமல் ஏற்கனவே இருந்த தேர்தல் முறைமையை நிறுத்திவிட்டார்கள். அதன் பின்னர் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இருந்தபோதும் புதிய தேர்தல் முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால், அடுத்த வருடத்தில் பழைய தேர்தல் முறைமையிலாவது தேர்தலை நடத்துவோம். அவர்கள் செய்த தவறை திருத்திக் கொண்டு பழைய தேர்தல் முறைமையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொண்டு பழைய விகிதாரசார முறைமையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்தும் திட்டத்தின் அடிப்படையிலேயே செயற்பட்டு கொண்டிருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.