இஸ்மதுல் றஹுமான்
வாகனங்களை வாடகைக்கு பெற்றுக்கொண்டு பின்னர் அவற்றை அடகு வைத்து பணம் பெற்ற 6 பேர் கொண்ட கோஷ்டியை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதில் பிரதான சந்தேக நபர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வாகனங்களை வாடகைக்கு கொடுக்கும் ஐந்து பேர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடுகளில் கொச்சிக்கடை, போரத்தொட்டையைச் சேர்ந்த மொஹமட் பர்ஷாத் 10-15 நாட்களுக்கு தேவை எனத் தெரிவித்து
வாகனங்களை வாடகைக்கு பெற்றுக்கொண்டு சென்றவர் அவற்றை திருப்பி ஒப்படைக்கவில்லையென தெரிவித்துள்ளனர். இவ்வாறு 8 வேன்கள், 2 கார்கள், 6 மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு பெற்றுக்கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரி.எம்.டீ.பீ. தல்வத்தவின் ஆலோசனைக்கு இனங்க பல்வேறு முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அதபத்து தலைமையில் பொலிஸ் கான்ஸ்டபல்களான விஜயரத்ன (56927), ரன்ஜு (35402) ஆகியோர் விசாரணை மேற்கொண்டு பிரதான சந்தேக நபராக கொச்சிக்கடை, போரத்தொட்டயைச் சேர்ந்த பர்ஷாத் மற்றும் தழுவகொட்டுவயைச் சேர்ந்த என்டனி அமல்ராஜ், போரத்தொட்டயைச் சேர்ந்த மொஹமட் சப்ரி மொஹமட் அஸ்பார் ஆகிய மூவரையும் வனாத்தவில்லு பொலிஸாரின் உதவியுடன் வனாத்துவில்லில் வைத்து கைது செய்தனர்.
இவர்களை புலன் விசாரணை செய்ததில் இன்னுமொரு பிரதான சந்தேக நபரான நீர்கொழும்பு, பெரியமுல்லையைச் சேர்ந்த மொஹமட் அபூபக்கர் மொஹமட் ரிஸ்வான் மற்றும் போரத்தொட்டயைச் சேர்ந்தவர்களான மொஹமட் நியாஸ் மொஹமட் பஸ்லான், அப்துல் ஹலீம் மொஹமட் றியாஸ் ஆகியோரையும் பொலிஸார் கைது செய்தனர்.
இவர்களை விசாரணை செய்ததில் 16 வாகனங்களை வாடகைக்கு பெற்று 1-2 மாதங்களுக்கு அடகு வைத்து பல மில்லியன் ரூபாய்களை பெற்றுள்ளமை தெரியவந்துள்ளன.
வாடகைக்கு பெற்றுக்கொண்ட 16 வாகனங்களில் 14 வாகனங்களை பொலிஸார் கண்டுபிடித்து கைபற்றியுள்ளன. மேலும் 2 வேன்களை பிரதான கந்தேகநபர்களில் ஒருவரான றிஸ்வான் மறைத்து வைத்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய வழக்குகளை நெறிப்படுத்து பொலிஸ் சார்ஜன் ரன்துன்(35402) கைபற்றப்பட்ட வாகனங்களுடன் ஆறு சந்தேக நபர்களையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதிபதி ரகித்த அபேசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தி அறிக்கை சமர்பித்தார்.
விசாரணையை அடுத்து பிரதான சந்தேக நபர்களான பர்ஷாத், றிஸ்வான் ஆகிய இருவரையும் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் ஏனைய நால்வரையும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவித்ததுடன் பிணையாளிகளில் ஒருவர் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் எனவும் கட்டளையிட்டார்.
மேலும் கைபற்றப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.