பௌத்த, ஹிந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சர்வமதத் தலைவர்களான கெளரவ சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரன்சி நாயக்க தேரர், கலாநிதி சிவ ஸ்ரீ பாபு சர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹசன் மௌலானா அல்-காதிரி மற்றும் கலாநிதி நிஷான் சம்பத் குரே பாதிரியார் ஆகியோர் வத்திக்கானின் பாப்பரசரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
சமய சகவாழ்வு மற்றும் சர்வதேச ஒற்றுமையை மதிக்கும் சமயத் தலைவராக உலகில் சமயங்களின் மற்றும் சர்வதேச ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் அதே வேளையில், மாண்புமிகு பாப்பரசர் பிரன்ஸிஸ் அமைதியை வலுப்படுத்த பல்வேறு வழிகளில் செயல்பட்டதாக சர்வமதத் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.
வத்திக்கானின் பாப்பரசராக அவர், சர்வதேச ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில், வத்திக்கானுக்கும் முழு உலகிற்கும் பெரும் சேவை செய்துள்ளார். அவருடைய மகிமையான செயல்களில், மாண்புமிகு இயேசுவின் மாபெரும் வழிகாட்டலை நாம் காண்கிறோம். மேலும், கிறிஸ்தவ மதப் பெரியார் என்ற வகையில், இன அமைதி மற்றும் சர்வதேச ஒற்றுமைக்காக வேண்டிய பல பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளார்.
மதிப்புக்குரிய பாப்பரசர் பிரன்ஸிஸ் அவர்களின் மறைவு உலகிற்கு பெரும் இழப்பாகும், இலங்கையின் பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கும், வத்திக்கான் மற்றும் உலக அமைதியை மதிக்கும் அனைத்து உலக மக்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ,” என்று இலங்கை சர்வமத தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.