முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இன்று காலை காலமான கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, 57 வயதில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
லொஹான் ரத்வத்தேவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவரது மறைவு நாட்டிற்கு, குறிப்பாக கண்டி மாவட்டத்திற்கு பேரிழப்பு என தெரிவித்தார்.
“அவர் எங்களுக்கு மிகவும் நெருக்கமான அரசியல்வாதி. அவர் மிகச் சிறந்த நண்பராக இருந்தார்,” என மகிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, லொஹான் ரத்வத்தே ராஜபக்ஷ குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என குறிப்பிட்டார்.
“அவர் மகிந்த ராஜபக்ஷவின் சகோதரராகவும், எங்கள் குடும்பத்தின் நெருங்கிய அரசியல் தோழராகவும் பணியாற்றினார். லொஹான் ரத்வத்தே, நாட்டிற்கும் கண்டி மாவட்டத்திற்கும் பல பணிகளை ஆற்றியவர். எங்கள் குடும்பத்தின் சார்பாகவும், அரசியல் கட்சியின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்,” என நாமல் ராஜபக்ஷ, மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு அஞ்சலி செலுத்தினார்.