முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக 26.09.2025 கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கிரிந்த மீன்பிடி துறைமுக மணல் அகற்றும் பணியை கொரிய நிறுவனத்திடம் ஒப்படைத்ததால், அரசாங்கத்துக்கு 2.6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்படுத்தியமையை முன்வைத்தே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
நேற்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இவ்விடயத்தை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இவ் வழக்கில் ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத் தலைவர் உபாலி லியனகே ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அவர்களை தற்போது நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
இவ் வழக்கு 2026 ஜனவரி 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










