அம்பன்பொல மற்றும் கல்கமுவ பிரதேசத்துக்கு இடையேயான மீ ஓயா பாலத்துக்கருகில் உள்ள ரயில் பாதையில் நேற்று (27) இரவு 8.30 மணியளவில் நடந்த விபத்தில் 25 முதல் 30 வயதுக்குட்பட்ட காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளது.
எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயிலிலேயே யானை மோதியுள்ளது.
குறித்த இடமானது யானைகள் அடிக்கடி வந்துபோகும் இடம் என்பதால் அதில் வரும் ரயில்கள் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் ரயில் மிக வேகமாக நகர்ந்ததாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ரயிலில் மோதிய யானை சுமார் 150-200 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அதன் உடல் பாகங்கள் ரயில் பாதை முழுவதும் சிதறிக் கிடந்துள்ளன.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து வடக்கு ரயில் பாதையில் பல மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு யானையில் உடல் ரயில் பாதையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
குறித்த வீதியின் அருகில் யானைகள் கடப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் உரிய பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் இல்லாததால் இதுபோன்ற யானைகள் உயிரிழப்புகள் தொடர்ந்து வருவதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.










